×

கடந்த மாதம் ரூ.1500க்கு விற்றது வாழை இலை கட்டு ரூ.300 ஆக சரிவு வரத்து அதிகரிப்பால் விலை குறைவு

தேனி, அக்.17: தேனி மாவட்டத்தில் ஆவணி மாதம் ஒரு வாழை இலை கட்டு 1500 ரூபாய்க்கு விற்றது. புரட்டாசி மாதம் நிலைமை தலைகீழாக மாறி, ஒரு வாழை இலை கட்டு விலை 300 ரூபாய் ஆக குறைந்துள்ளது.தேனி மாவட்டத்தில் வாழை விளைச்சல் அதிகம் உள்ளது. இங்கிருந்து மதுரை, திருச்சி, சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வாழை இலை விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். கடந்த ஆவணி மாதம் முகூர்த்த நாட்கள், கோயில் திருவிழா நாட்கள் அதிகம் இருந்ததால் வாழை இலையின் விலை ஒரு கட்டு 1500 ரூபாய் வரை விற்றது. புரட்டாசி மாதம் முகூர்த்த நாட்கள் இல்லாததாலும், விளைச்சல் அதிகரிப்பால் வரத்து அதிகரித்ததாலும் விலை ஒரு கட்டு 300 ரூபாய்க்கு சரிந்தது.இது குறித்து விவசாயி பாலகுரு கூறுகையில், வாழை தார் வெட்டிய பின்னர், ஒரு துாரில் முளைக்கும் வாழையில் ஆண்டுக்கு 150 ரூபாய்க்கு வாழை இலை அறுக்க முடியும். ஒரு கட்டு வாழை இலை அறுக்க கூலி, அவர்களுக்கு வழங்கப்படும் டீ, காபி, வடை செலவு எல்லாம் சேர்த்து 150 ரூபாய் தர வேண்டும். இந்நிலையில் வாழை இலை கட்டு 300 ரூபாய் என குறைந்ததால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்காது. ஆனாலும் கையை கடிக்காது. இன்னும் சில நாட்களில் ஐப்பசி பிறந்ததும் மீண்டும் விலை உயரும். அப்போது விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கும். என்றார்.

Tags : Rs ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...