×

மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் மேலூர் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

மேலூர், அக். 17:மேலூர் கல்வி மாவட்டம் மற்றும் மதுரை வருவாய் மாவட்டம் என தொடர்ந்து அறிவியல் கண்காட்சியில் மேலூர் அரசுப் பள்ளி இரட்டையர்கள் வெற்றி பெற்று அசத்தினர். மேலூர் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி மற்றும் மதுரை வருவாய் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெற்றது. இதில் மேலூர் அரசு இருபாலர் பள்ளியைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவர்களான பாலகுமார், பாலசந்தர் (இரட்டை சகோதரர்கள்) கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இவர்கள் அவசர காலத்தில் சாலைகளில் ஆம்புலன்ஸ் விரைவாக சென்று வருவதற்கு கட்டுப்பாட்டுக் கருவிகளை வடிவமைத்துள்ளனர். மேலும் நிலக்கடலையை அறுப்பதற்கு சூரிய ஒளி மற்றும் மின்சக்தியில் இயங்கும் மின்மோட்டார்களையும் இவர்கள் வடிவமைத்துள்ளனர்.

இத்துடன் மின்சார ஊழியர்கள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் மின்கம்பங்களில் ஏறுவதற்கு தேவையான சிறப்பு காலணிகளும் இவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவர்களின் இந்த அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக கல்வி மற்றும் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகளில் 3ம் இடம் பெற்றனர். வெற்றி பெற்று திரும்பிய இவர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மேலூர் மாவட்ட கல்வி அலுவலர் மீனாவதி, பள்ளி தலைமை ஆசிரியர் ராவணன் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டினர்.

Tags : Malur Public School Students Achievement ,District Science Exhibition ,
× RELATED மாவட்ட அறிவியல் கண்காட்சியில் அரசு பள்ளி மாணவி முதலிடம்