×

திருமங்கலம் மீனாட்சியம்மன் கோயிலில் தர்மம் எடுத்த மாற்றத்திறனாளி 5 ஆண்டுக்கு பின்பு மகளுடன் இணைந்தார்

திருமங்கலம், அக். 17: திருமங்கலம் மீனாட்சியம்மன் கோயிலில் தர்மம் எடுத்த 55 வயது முதியவர் 5 ஆண்டுகளுக்கு பின்பு மகளுடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை உண்டாகியது.ஈரோடு சூரம்பட்டி வலசுபகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (55). வாய் பேச முடியாதவர். காதும் கேட்காது. மாற்றுத்திறனாளியான இவர் கடந்த 2015ம் ஆண்டு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறினார். பல இடங்கில் சுற்றிதிரிந்த கிருஷ்ணன் கடந்த ஓராண்டாக மதுரை மாவட்டம் திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலின் முன்பு பக்தர்களிடம் தர்மம் பெற்று வாழ்ந்து வந்தார்.அவ்வப்போது கோயிலின் உளவாரபணியிலும் ஈடுபட்டு வந்தார். கிருஷ்ணன் காணாமல் போனது குறித்து அவரது மகள் லதா ஈரோடு தெற்கு போலீசில் புகார் தெரிவித்திருந்தார். வழக்குப்பதிவு செய்த ஈரோடு போலீசார் விசாரணை நடத்தி அவரை தேடிவந்தனர். இந்தநிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஈரோட்டைச் சேர்ந்த அபிராமி என்பவர் திருமங்கலம் மீனாட்சியம்மன் கோயிலில் சாமி கும்பிட வந்தார். கோயில் வாசலில் அமர்ந்து தர்மம் எடுத்த கிருஷ்ணனை கண்ட அவர் இது குறித்து ஈரோட்டிலுள்ள அவரது மகள் லதாவிற்கு போனில் தகவல் தெரிவித்தார்.

திருமங்கலம் கோயிலில் தர்மம் எடுப்பவர் உங்களது தந்தை போல் இருப்பதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த லதா அவரது கணவர் சங்கர் மற்றும் உறவினர்கள் பெரியசாமி, மாரிமுத்து ஆகியோர் திருமங்கலம் கோயிலுக்கு வந்தனர். அங்கு வாசலில் அமர்ந்து தர்மம் எடுத்து கொண்டிருந்த தனது தந்தை கிருஷ்ணனை கண்ட லதா கண் கலங்கினார். மகளை ஐந்து ஆண்டுகளுக்கு பின் பார்த்த கிருஷ்ணனும் கதறி அழுதார்.
இது கோயிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக கோயில் நிர்வாகத்தை தொடர்பு கொண்ட லதா கோயிலில் அமர்ந்து தர்மம் எடுப்பது தனது தந்தைகிருஷ்ணன் என கூறியுள்ளார். இது குறித்து கிருஷ்ணனிடம் கோயில் ஊழியர் தண்டபாணி விசாரிக்கையில் சைகையில் மகள் என கூறயுள்ளார்.இதைத்தொடர்ந்து கோயில் செயல் அலுவலர் சர்க்கரையம்மாள் உத்தரவுபடி ஊழியர் தண்டபாணி திருமங்கலம் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். எஸ்ஐ இளங்கோ தலைமையில் வந்த போலீசார் கிருஷ்ணன் மற்றும் அவரது மகள் லதா உடன் வந்த உறவினர்களை ஸ்டேசன் அழைத்து சென்று விசாரணை நடத்தினார். பின்னர் ஈரோடு தெற்கு போலீஸ் ஸ்டேசனை தொடர்பு கொண்டு திருமங்கலம் போலீசார் கிருஷ்ணன் மாயமானது உண்மைதான் என்பதை அறிந்து அவரை மகள் லதா மற்றும் குடும்பத்தாருடன் அனுப்பி வைத்தனர்.ஐந்து ஆண்டுகளுக்கு பின்பு தனது குடும்பத்துடன் இணைந்த மாற்றுத்திறனாளி முதியவர் கிருஷ்ணன் மகிழ்ச்சியுடன் திருமங்கலத்திலிருந்து சொந்த ஊருக்கு கிளம்பிச் சென்றார்.

Tags : Thirumangalam Meenakshiamman ,
× RELATED டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி பலி