×

பாதுகாப்பான பயணத்தை கேள்விக்குறியாக்கும் ரயில்வேயை கண்டித்து ஓடும் தொழிலாளர்கள் போராட்டம்

மதுரை, அக்.17: பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை கேள்விக்குறியாக்கும் ரயில்வே துறையை கண்டித்து எஸ்ஆர்எம்யூ ஓடும் தொழிலாளர்கள் மதுரையில் போராட்டம் நடத்தினர். ஓடும் தொழிலாளர் பிரிவு சார்பாக மதுரை ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவு வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓடும் தொழிலாளர் பிரிவு ேகாட்ட செயலாளர் அழகுராஜா தலைமை வகித்தார். தலைவர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார். எஸ்ஆர்எம்யூ கோட்ட செயலாளர் ரபீக், தலைவர் ரவிச்சந்திரன், உதவி கோட்ட செயலாளர் ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்படும் புதிய ரயில்களின் அடிப்படையில் டிரைவர்கள் பணியிடங்களை உருவாக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக புதிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதற்கு ஏற்ப டிரைவர்களை நியமிக்காமல் ரயில்வே துறை அலட்சியம் காட்டுகிறது. அதுபோல சரக்கு ரயில் ஓட்டுபவர்கள் 36 மணி நேரத்தை கடந்து விட்டால், அவருக்கு தலைமையிடத்திற்கு வருவதற்கு ஏற்ப ரயில்களை ஓட்ட அனுமதிப்பது கிடையாது. அவர்களை தலைமையிடத்திற்கு அனுப்பாமல் 4 அல்லது 5 நாட்களுக்கு வேலைவாங்கும் போக்கை கைவிட வேண்டும்.

விரைவு ரயில்கள் சேர வேண்டிய ரயில்வே ஸ்டேஷனை சென்றடைந்ததும், அந்த வண்டியின் காலிப்பெட்டிகளை பிட்லயனுக்கு கொண்டு செல்ல வேண்டும். இதற்காக நியமிக்கப்பட்ட சண்டிங் டிரைவர்களுக்கு பணி வழங்காமல், விரைவு வண்டி டிரைவர்களையே பிட்லைனுக்கு கொண்டு சென்று நிறுத்தச் சொல்கின்றனர். அதிக தூரம் ஓட்டிய டிரைவர்களுக்கு ஓய்வு வழங்காமல் பணிகளை செய்யச் சொல்வது பாதுகாப்பிற்கு எதிரானது. ஓடும் தொழிலாளர்களின் ஓய்வு அறை 3 நட்சத்திர விடுதியின் தரத்தில் இருக்க வேண்டும் என ரயில்வே போர்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் மதுரை கோட்டத்தில் உள்ள மணியாச்சி, மீளவிட்டான், புனலூர் மற்றும் மானாமதுரை ஓய்வு அறைகள் மட்டமாக உள்ளது. சரிவர ஓய்வு எடுக்காமல் 2 ஆயிரம் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஓட்டிச்செல்லும் டிரைவர்களால் பாதுகாப்பான பயணத்தை எப்படி மேற்கொள்ள முடியும். ஓய்வு அறையின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் எஸ்ஆர்எம்யூ ஓடும் தொழிலாளர்கள் பிரிவு நிர்வாகிகள் முருகானந்தம், பேச்சுமுத்து, நாகராஜ்பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED வீட்டு வேலை தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள்..!