×

மதுரை நகருக்குள் வைகையின் பரப்பளவு எவ்வளவு? எல்லையை வரையறை செய்ய மூத்த வக்கீல் நியமனம்

மதுரை, அக். 17: மதுரை நகருக்குள் வைகையின் பரப்பளவு மற்றும் எல்லையை வரையறை செய்ய மூத்த வக்கீல் தலைமையில் குழுவை அமைத்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த வக்கீல் அருண்நிதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டத்தில் ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. நீர்நிலைகள், நீர்வழித்தடங்கள் தற்போது ஆக்கிரமிப்பில் உள்ளன. ஆக்கிரமிப்பாலும், தண்ணீரை தேக்க முடியாததாலும் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. இந்நிலை நீடித்தால். மாவட்டம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். நீர்நிலைகளில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருட்களால் நீர், நிலத்திற்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. வண்டியூர் கண்மாய் போன்ற இடங்களில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்டத்திலுள்ள நீர்நிலைகள், நீர்வழித் தடங்களிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும், தூர்வாரி தண்ணீரை தேக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இதேபோல் நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளோருக்கு பட்டா உள்ளிட்ட அரசின் சலுகைகள் வழங்கக்கூடாது. மின் இணைப்பு, வாக்காளர் அட்டை உள்ளிட்டவற்றை ரத்து செய்ய வேண்டும். ஐகோர்ட் கிளை எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதியிலுள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட் கிளை, தமிழகத்தில் கண்மாய், குளம், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் எல்லைகளை முறையாக அளவீடு செய்து, அவற்றின் எல்லைகளை வரையறை செய்ய வேண்டும். குறிப்பிட்ட நீர்நிலைகளின் சர்வே எண்ைண உடனடியாக பதிவுத்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த நிலங்களின் சர்வே எண்ணிற்கு உட்பட்ட பகுதியில் எவ்வித பத்திரப்பதிவுகளும் மேற்ெகாள்ளக்கூடாது என உத்தரவிட்டிருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.  அப்போது மதுரையிலுள்ள 10 நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மூத்த வக்கீல் வீராகதிரவன் ஆஜராகி, “ஆய்வுகளில் அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை. மதுரை நகருக்குள் வைகையின் எல்லை குறைந்து கொண்டே போகிறது. எல்லை வரையறை இல்லாமலேயே ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டதாக கூறுகின்றனர். ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக வைகை ஆற்றுக்குள் சுற்றுச்சுவர் எழுப்புகின்றனர்” என்றார். அப்போது அரசுத்தரப்பில், “ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, எல்லை குறிப்பிட்ட பிறகு, சாக்கடை கலப்பதை தடுக்கும் வகையில் தான் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது” என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “எல்லை வரையறை செய்திருந்தால், அங்கு எல்லைக்கல் நட்டிருக்கலாம். அப்படி எதுவும் இல்லையே. சாக்கடையை தடுக்க எழுப்பும் சுற்றுச்சுவர் சீனபெருஞ்சுவரைப் போல நீண்டு கொண்டே ஏன் போகிறது” என்றனர்.

பின்னர், மூத்த வக்கீல் வீராகதிரவன் தலைமையில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக ஒரு குழு அமைக்கப்படுகிறது. இக்குழுவினர் வரும் 19ம் தேதி (சனிக்கிழமை) வைகையில் ஆரப்பாளையம் பாலம் முதல் தெப்பக்குளம் பிடிஆர் பாலம் வரையிலுள்ள வைகை ஆற்றின் பரப்பளவு எவ்வளவு என்பதையும், அதன் எல்லை குறித்தும் ஆய்வு செய்து அளவீடு செய்ய வேண்டும். இந்த பணியின்போது மதுரை வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு தாசில்தார்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இருக்க வேண்டும். ஆய்வு தொடர்பான அறிக்கையை நவ.12ல் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.

Tags : area ,Madurai ,Vaigai ,lawyer ,
× RELATED மதுரை மாவட்ட குடிநீருக்காக...