×

கொடைக்கானலில் பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் தயார் ஆர்டிஓ தகவல்

கொடைக்கானல், அக். 17: கொடைக்கானலில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் தயாராக உள்ளதாக ஆர்டிஓ சுரேந்திரன் தெரிவித்தார்.
கொடைக்கானலில் கடந்த கஜா புயலின் போது பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக வனப்பகுதியில் 1000க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன. சாலையோரங்களில் 100க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் அரசு எடுத்துள்ள முன்னேற்பாடுகள் குறித்து கொடைக்கானல் டிஆர்ஓ சுரேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது, ‘கடந்தாண்டு கஜா புயலின்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் பல்வேறு இடங்கள் பாதிக்கப்பட்டன. அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து அந்த புயலை எதிர்கொண்ட காரணத்தினால் நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. அதேபோல் தற்போது துவங்கவுள்ள வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு கொடைக்கானல் பகுதியில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இப்பணியில் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் பல்வேறு அரசு துறைகள், தன்னார்வலர்கள் என ஏராளமானோர் ஈடுபடவுள்ளனர். இந்த பருவமழையின்போது பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக நிவாரண பணிகள் செய்வதற்கு இந்த குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்களது குறைகளை தீர்ப்பதற்காக திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் சிரமத்தை குறைக்கும் வகையில் மாதம்தோறும் இரண்டாம் வாரத்தில் கொடைக்கானல் ஆர்டிஓ அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : Kodaikanal ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்