×

திண்டுக்கல் மாவட்டத்தில் தடை புகையிலை ‘தடையில்லாமல்’ விற்பனை

திண்டுக்கல், அக். 17:திண்டுக்கல் மாவட்டத்தில் அரசின் தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருவதாக சமூகஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2013 ஏப்ரல் 23ம் தேதி பான்மசாலா, வாயில் மெல்லும் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இப்பொருட்களை மொத்தமாகவோ, சில்லரையாகவோ விற்பனை செய்யக்கூடாது. மீறினால் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடப்பட்டது.திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2013 ஜூன் மாதத்துடன் விற்பனை செய்யக் கூடாது என அப்போதைய கலெக்டர் அறிக்கை விடுத்திருந்தார். ஆனால், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இவற்றின் விற்பனை கனஜோராக நடந்து வருகிறது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றால் பறிமுதல் செய்ய உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உரிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் போதிய அலுவலர்கள் இல்லாததால் அதிரடி ரெய்ட் நடத்த இத்துறை அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். சிகரெட், பீடியைக் காட்டிலும் 28 சதவீதம் பான் மசாலா மற்றும் வாயில் மெல்லும் புகையிலையால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. மாநில அளவில் 13 சதவீதம் பேர் இப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். தற்போது பள்ளி, கல்லூரியில் படிப்பவர்களிடம் புகையிலை பொருட்கள் புழக்கம் அதிமாகி வருகிறது. தடை விதிக்கும் போது கடைகளில் ரெய்டு நடத்திய அதிகாரிகள், தற்போது இதன் விற்பனையை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். எனவே மாவட்ட நிர்வாகம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில்: மாநில அளவில் தினமும் 4 கோடி வரை இப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ரூ.100 கோடி வரை வருவாய் கிடைப்பதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. பான்மசலா, வாயில் மெல்லும் புகையிலையை பயன்படுத்துவதால் புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு, நரம்பு மண்டலம், மூளை பாதிப்பு உட்பட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்பழக்கதை கைவிட முடியாமல் இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். கடைகளில் பதுக்கி வைத்து இப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.5 க்கு விற்பனை செய்யப்பட்ட பாக்கெட் ரூ.10 முதல் 15 வரையும், சற்று பெரிய அளவிலான பாக்கெட் ரூ. 30 வரை வைத்து கொள்ளை லாபம் பார்க்கின்றனர். கிராமப்பகுதிகளில் கடைகளில் நேரடியாகவே விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 420, 120, ஜர்தா போன்ற பீடா வகை களையும் தடை செய்ய வேண்டும்’ என்றனர்

Tags : Dindigul district ,
× RELATED கொடைக்கானல் மலைப்பகுதியில் கோடை...