×

தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் ‘பர்மிட்‘ ரத்து

சேலம், அக். 17: சேலத்தில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பஸ்களில் தீபாவளி பண்டிகையின் போது கூடுதல் கட்டணம் வசூலித்தால் பர்மிட் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து துறையினர் எச்சரித்துள்ளனர்.
சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னை, மதுரை, நாகர்கோயில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்செந்தூர், திருப்பதி, ராமேஸ்வரம், திருச்சூர், எர்ணாகுளம், குருவாயூர், திருவனந்தபுரத்திற்கு அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. விரைவு போக்குவரத்து கழகத்தில் முன்பதிவு டிக்கெட் கடந்த சில நாட்களுக்கு முன் முடிந்தது. விரைவு போக்குவரத்து கழகத்தில் இடம் கிடைக்காதவர்கள், ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர்.
இதை பயன்படுத்தி ஆம்னி பஸ் உரிமையாளர்கள் முன்பதிவு டிக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆம்னி பஸ்களில் முன்பதிவு டிக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்றால் அந்த பஸ்சின் பர்மிட் ரத்து செய்யப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 50 ஆம்னி பஸ்கள் தினசரி பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. தீபாவளியை முன்னிட்டு பயணிகள் ஆம்னி பஸ்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த முன்பதிவு டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது. அவ்வாறு விற்பது தெரிய வந்தால் அந்த பஸ்சின் பர்மிட் ரத்து செய்யப்படும்,’’ என்றனர்.

Tags : Omni ,Diwali ,
× RELATED புதுகையில் பைக் மீது ஆம்னி பஸ் மோதல் தந்தை, 4வயது மகள் தலை நசுங்கி பலி