×

தாலிக்கு தங்கம் வாங்குவதற்காக 6 மணி நேரம் காத்திருந்த பயனாளிகள் ஏமாற்றம்

ஆத்தூர், அக்.17: ஆத்தூரில், தாலிக்கு தங்கம் வாங்குவதற்காக 6 மணி நேரம் காத்திருந்த பயனாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகர பகுதியைச் சேர்ந்த ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ், உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் உள்ளிட்டவை கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது. இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2018ம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் விண்ணப்பித்து காத்திருந்த 304 பயனாளிகளுக்கு நேற்று ஆத்தூர் பிடிஓ அலுவலகத்தில்  தாலிக்கான தங்கம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, காலை 10 மணிக்கே பயனாளிகள் குவிந்தனர். ஆனால், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கார்த்திகா மாலை 4 மணி வரையில் வரவில்லை. இதனால், சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக  சாப்பிடக்கூட செல்லாமல் கைகளில் குழந்தைகளுடன் காத்திருந்த பெண்கள் அவதிக்குள்ளாகினர். மாலை 6 மணி வரையிலும் சம்பந்தப்பட்ட அதிகாரி வந்து சேராததால் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த ஓராண்டுக்கு மேலாக திருமண உதவி திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து காத்திருந்தோம். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒன்றிய அலுவலகத்திலிருந்து உதவித்தொகை வழங்குவதாக தகவல் வந்தது. இதன்பேரில், குறிப்பிட்ட தினமான இன்று(நேற்று) மாலை வரையிலும் காத்திருந்தும் உதவித்தொகை வழங்காதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என தெரிவித்தனர். இதுதொடர்பாக பிடிஓ அலுவலர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், வாழப்பாடி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கியதால் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ஆத்தூருக்கு வருவதில் தாமதமாகி விட்டதாக தெரிவித்தனர். தாலிக்கு தங்கம் வாங்குவதற்காக 6 மணி நேரம் காத்திருந்த பயனாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற சம்பவத்தால் ஆத்தூரில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Dali ,
× RELATED லோக்கல் சரக்கு விமர்சனம்