×

ராசிபுரம் நகராட்சியில் புதர்மண்டிய சுகாதார வளாகம்

ராசிபுரம்,அக்.17: ராசிபுரம் நகராட்சி ராமசாமி படையாச்சி தெருவில் உள்ள சுகாதார வளாகத்தை சுற்றி புதர் மண்டியது. இதை நகர வளர்ச்சி மன்றத்தினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் நேற்று சுத்தப்படுத்தினர். ராசிபுரம் நகராட்சிக்குட்பட்ட ராமசாமி படையாச்சி தெரு-2ல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுகாதார வளாகம் கட்டப்பட்டது. போதிய பராமரிப்பு இல்லாததால், முள் மரங்கள், செடிகள் முளைத்து புதர்மண்டியது. காடு போன்று மாறியது. இதனால் பொதுமக்கள் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியவில்லை. சமீபத்தில் பெய்த மழையால் செடிகள் செழித்து வளர்ந்து விஷ ஜந்துகள் அதிகரித்தது. இதனால் இரவு நேரத்தில் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்தனர். விவசாய நிலங்கள், காலி வீட்டுமனைகளை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டது. இதுகுறித்து நகர வளர்ச்சி மன்ற தலைவர் பாலு, பொதுமக்களின் சார்பில், நகராட்சி ஆணையாளரிடம் தெரிவித்தார். இதையடுத்து நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் நகர வளர்ச்சி மன்றத்தினர் நேற்று அப்பகுதியில் மரம், செடிகளை அகற்றி சுத்தப்படுத்தினர். சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தனர்.

Tags : Rasipuram Municipality ,
× RELATED வரி செலுத்தாவிட்டால் குடிநீர்...