×

பாவூர்சத்திரம் அருகே ஆபத்தான நிலையில் நீர்த்தேக்க தொட்டி

பாவூர்சத்திரம், அக். 17: கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையானூர் ஊராட்சி அழகம்பெருமாளூர் - சண்முகபுரம் கிராமத்தில்  மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தண்ணீர் தொட்டிக்கு திரவியநகர் பகுதியில் இருந்து  ஆவுடையானூர் ஊராட்சியில் உள்ள பம்பிங் தொட்டிக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து குடிநீர் ஏற்றப்படுகிறது. இங்கிருந்து சண்முகபுரம், அழகம்பெருமாளூர், காமராஜர் நகர் பகுதிகளுக்கு  குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் 500க்கும்  மேற்பட்ட குடும்பங்கள் குடிநீர் வசதி பெற்று வருகின்றன. இந்த குடிநீர் தொட்டி கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. தற்போது தொட்டியின் தூண்களில் விரிசல் விழுந்து  காணப்படுகிறது. சைடு பில்லர்களிலும் விரிசல் விழுந்து வருகிறது.

தொட்டியின் அடித்தளத்தில் உள்ள சிமென்ட் காரைகள் பெயர்ந்து வருகிறது. மூடி பகுதிகளிலும் விரிசல் விழுந்து சிமென்ட் காரைகள் பெயர்ந்துள்ளன. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அதன் பலத்தை இழந்து வருகிறது. ஆபத்தான நிலையில் உள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால்  இப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் காணப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட பொறியாளர்களை கொண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ஆய்வு செய்ய வேண்டும். ஆபத்தான நிலை கண்டறியப்பட்டால் இடித்து அகற்றிவிட்டு புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags : Paupasattram ,
× RELATED கடையம் அருகே பரபரப்பு சாலையில் நின்ற கன்டெய்னரில் பணமா?