×

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் வாக்குச்சாவடிகளுக்கு முன்பே ‘விசிட்'அடிங்க!

நெல்லை, அக். 17: வாக்குச்சாவடிகளை முன்பே பார்வையிட்டு அனைத்து வசதிகளையும் உறுதி செய்ய வேண்டுமென்று நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் பணியாற்றும் மண்டல அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். நெல்லை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாங்குநேரி தொகுதி தேர்தல்  பணியில் ஈடுபடும்  மண்டல அலுவலர் மற்றும் மண்டல உதவி அலுவலர்களுக்கு  பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் நடந்தது. நாங்குநேரி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் நடேசன் முன்னிலை வகித்தார். பயிற்சி வகுப்பில் கலெக்டர் பேசியதாவது: நாங்குநேரி தொகுதியில் தேர்தல் பணிகளுக்காக 30 மண்டல அலுவலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவில் ஒரு மண்டல அலுவலர்,  ஒரு மண்டல உதவி அலுவலர், ஒரு உதவியாளர், 4 துப்பாக்கி ஏந்திய காவலர்கள் என 7 பேர் இடம் பெற்றுள்ளனர். ஒரு குழுவிற்கு 10 முதல் 12 வரை வாக்குபதிவு மையம் ஒதுக்கப்பட்டு 30 மண்டல குழுக்கள் 299 வாக்குபதிவு மையங்களை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு மையங்களை முன்னதாக பார்வையிட்டு மின்சாரம், இருக்கை வசதி, சாமியானா, குடிநீர், சாய்வுதளம், இணையதள கண்காணிப்பு கேமரா வசதி, மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர வண்டி போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும். தேர்தல் நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய பணிகளை நிதானமாக விதிமுறைகளின்படி மேற்கொள்ள வேண்டும்.தேர்தல் நடக்கும் நாளன்று மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்க ஏதுவாக ஒவ்வொரு வாக்குச்சாவடி மைத்திற்கும் தன்னார்வலர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு மையம் குறித்து தெளிவான விவரங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். வாகனத்தின் மூலம் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லுதல் மற்றும் எடுத்துச் செல்லும் வழிகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். வாக்குசாவடி அமைந்த இடத்திலிருந்து 100 மீட்டருக்குள் எந்த அரசியல் கட்சியின் அடையாளங்களும் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

பயிற்சி வகுப்பில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையா, தேர்தல் தாசில்தார் தங்கராஜ், நாங்குநேரி தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பகவதி பெருமாள், நாங்குநேரி தாசில்தார் ரஹ்மத்துல்லா, தேர்தல் பயிற்சி  ஒருங்கிணைப்பாளர்கள் விமலாராணி, வெங்கட்ராமன் மற்றும் மண்டல குழுக்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : constituency ,Nonguneri ,
× RELATED கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்...