×

கோழிப்போர்விளையில் 45 மி.மீ பதிவு குமரியில் தொடர் மழையால் மேலும் 9 வீடுகள் இடிந்தன

நாகர்கோவில்: குமரி மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்து வரும் நிலையில் தொடர் மழைக்கு மேலும் 9 வீடுகள் இடிந்து விழுந்தன. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. விட்டுவிட்டு பெய்து வருகின்ற மழையால் மண் சுவர்களினால் ஆன வீடுகள் கடுமையாக பாதிக்க தொடங்கியுள்ளன. அதுபோன்ற வீடுகள் அடுத்தடுத்து இடிய தொடங்கியுள்ளன. நேற்று காலை வரை மாவட்டம் முழுவதும் மேலும் 9 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இதில் திருவட்டார் தாலுகா பகுதியில் 5 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் 2, கிள்ளியூர் தாலுகாவில் 2 வீடுகளும் என்று 9 வீடுகள் பகுதியளவு இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளன. வீடுகளில் இருந்தவர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. அதே  வேளையில் வீடுகளில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. மாவட்டம் முழுவதும் மழையால் சேதமடைந்த வீடுகள் வருவாய்துறையினரால் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் நேற்று காலை வரை அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 45 மி.மீ மழை பதிவாகி இருந்தது. கன்னிமாரில் 7.6, கொட்டாரம் 26, மயிலாடி 39.2, நாகர்கோவில் 9.2, சுருளோடு 10.2, குருந்தன்கோடு 16.4 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 29.70 அடியாகும். பெருஞ்சாணியில் 68.95 அடியும், சிற்றார்-1ல் 12.40, சிற்றார்-2ல் 12.49 அடியும், பொய்கையில் 12, மாம்பழத்துறையாறு அணையில் 54.12 அடியும் நீர்மட்டம் காணப்பட்டது. சிற்றார்-1ல் 192 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. பெருஞ்சாணியில் 214 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முக்கடல் அணை நீர்மட்டம் 14.70 அடியாகும். மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருகின்ற நிலையில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags : houses ,Kumari ,Kozhikode ,
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...