×

10 சதவீத போனஸ் அறிவிப்பால் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் ஏமாற்றம் பட்டினி போராட்டம் நடத்த ஐஎன்டியுசி முடிவு

நாகர்கோவில்:   தீபாவளியையொட்டி தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று அரசால் அறிவிக்கப்பட்டது. இதில் அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத்தோட்ட கழகம், தமிழ்நாடு தேயிலை ேதாட்ட கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அந்த நிறுவனங்களின் ஒதுக்க கூடிய உபரி தொகையை கருத்தில் கொண்டு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணை தொகையோ அல்லது 8.33 சதவீத போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணை தொகையோ வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ரப்பர் கழக ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் கிடைக்கும் வகையில் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் இந்த அறிவிப்பு தொழிலாளர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது என கூறி தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக ஐஎன்டியுசி குமரி மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன் கூறுகையில், ‘அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை இழுபறியாகி இதுவரை முடிவு எட்டப்படாத நிலையில் உள்ளது. இதனால் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இந்த சூழலில் போனஸ் தொகையும் 10 சதவீதம் வழங்கப்படும் என்ற அளவில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. 8.33 போனஸ், 1.67 சதவீதம் கருணை தொகை ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   ரப்பர் கழகம் நஷ்டத்தில் இயங்குவதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் இந்த முறைதான் திடீரென்று குறைக்கப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை போன்றே அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கும் 20 சதவீத போனஸ் தமிழக அரசு வழங்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. போனஸ் ெதாகையை உயர்த்தி அறிவிக்காவிட்டால் தீபாவளி பண்டிகையன்று அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் பட்டினி போராட்டம் நடத்த வேண்டிய நிலைதான் ஏற்படும்’ என்றார்.

Tags : INTUC ,bonus announcement ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஐஎன்டியூசி ஆதரவு