×

தோகைமலை ஒன்றிய பகுதியில் சுகாதார பணிகள் மும்முரம்

தோகைமலை, அக்.17: தோகைமலை ஒன்றிய பகுதியில் தினகரன் செய்தி எதிரொலியாக சுகாதார பணிகள் மும்முரமாக நடைபெற்றது.கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் கடந்த வாரம் மழை பெய்தது. அதனை தொடர்ந்து தற்போதும் அவ்வப்போது மழை பெய்து வருகின்றது. இதனால் பிளாஸ்டிக் கப், டயர், தேங்காய் ஓடுகள் என தேங்கிக்கிடக்கும் கழிவு பொருட்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகும் நிலையில் உள்ளது. தோகைமலை ஒன்றியத்தில் அரசு துவக்கப்பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், ஆதி திராவிடர் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட 85 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் ஒரு சில பள்ளிகளின் கட்டிடங்களுக்கு வெளிபுறங்களில் சுகாதாரம் இல்லாமல் மழை நீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் சூழல் அதிகளவில் உள்ளது. இந்நிலையில் பகல் நேரங்களில் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளை கொசுக்கள் கடிக்கும் சூழல் உள்ளதாக தெரிவித்து வருகின்றனர். இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் டெங்கு உட்பட பல்வேறு வைரஸ் காய்ச்சல்கள்; பரவ காரணமாகிறது.கடந்த 5ம் தேதி அன்று ஒரே நாளில் 2 குழந்தைகள் வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டு இறந்ததால் பெற்றோர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த ஆண்டுகளில் 100க்கும் அதிகமான மஸ்தூர் பணியாளர்களை கொண்டு அனைத்து கிராமங்களிலும் தேங்கி கிடக்கும் சாக்கடைகள், பிளாஸ்டிக் கழிவுகள் உட்பட தேவையற்ற நீர் நிலைகளை அழிப்பது, வீடுகளுக்குச் சென்று குடிநீர் தொட்டிகளை பரிசோதனை செய்து மருந்து தெளித்தல், கொசுமருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வந்தனர். ஆனால் தற்போது இப்பணிகள் போதிய பணியாளர்கள் இல்லாமல் சரிவர நடப்பதில்லை என்று கூறுகின்றனர்.

இதனால் தோகைமலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமப்புறங்கள் மற்றும் அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்து தேங்கி கிடக்கும் கழிவுப் பொருட்களை அப்புற படுத்தவும், ஏற்கனவே செயல்பட்ட மஸ்தூர் பணியாளர்களை கொண்டு, அவர்கள் செய்து வந்த பணிகளை அந்தந்த பகுதிகளில் ஈடுபடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து இருந்த செய்தி தினகரன் நாளிதழில் வெளிவந்தது. இதன் எதிரொலியாக தோகைமலை ஒன்றிய பகுதிகளில் சுகாதார பணிகளை மேற்கொள்ள கலெக்டர்அன்பழகன் உத்தரவிட்டார். இதனையடுத்து ஒன்றிய ஆணையர் (கிராம வளர்ச்சி) ராஜேந்திரன் தலைமையில் ஒன்றியம் முழுவதும் உள்ள பள்ளிகள், தெருக்கள், பொது இடங்களில் பிளாஸ்டிக் கப், டயர், தேங்காய் ஓடுகள் என தேங்கிக்கிடக்கும் கழிவு பொருட்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட உதவி இயக்குநர்( ஊராட்சிகள்) உமாசங்கர்ஆய்வு செய்து வருகிறார்.இதனால் தோகைமலை பகுதிகளில் உள்ள சமூகஆர்வலர்களும், பொதுமக்களும் தினகரன் நாளிதழுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்து உள்ளனர். மேலும் சுகாதார பணிகளை அனைத்து கிராமங்களிலும் தொடர்ந்து மேற்கொண்டு வைரஸ்காய்ச்சலை தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags : area ,Dokaimalai ,
× RELATED வாட்டி வதைக்கும்...