×

வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்

புதுச்சேரி, அக். 17:   புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 15 நாட்களில் 180 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.   டெங்கு காய்ச்சல் என்பது வைரஸ் மூலம் பரவக் கூடிய நோயாகும். ஒரே இடத்தில் பல நாட்களாக தேங்கி நிற்கும் நீரிலிருந்து உற்பத்தியாகும் ‘ஏடிஸ் எஜிப்தி’ எனும் கொசுக்கள் நம்மைக் கடிப்பதால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. ஏடிஸ் கொசு கடித்த ஒருவருக்கு காய்ச்சல், தலைவலி, கண்களின் பின்புறம் வலி, உடல் சோர்வு, ரத்த அணுக்கள், ரத்த வட்டுக்கள் குறைதல் போன்ற பிரச்னை ஏற்படும். இது ஆரம்ப கட்ட அறிகுறியாகும். அதுவே நோய் கடுமையாகும்போது மூக்கு, வாய், ஈறுகளில் ரத்த கசிவு ஏற்படும். அவர்கள் உடனே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். இந்நிலையில் அண்டை மாநிலமான தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை கடந்த 2010ல் 45 பேரும், 2011ல் 232 பேரும், 2012ல் 1871 பேரும், 2013ல் 1063 பேரும், 2014ல் 1408 பேரும், 2015ல் 803 பேரும், 2016ல் 490 பேருக்கும், 2017ல் 4,568 பேரும், 2018ல் 581 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

  ஆனால், நடப்பாண்டு டெங்கு காய்ச்சல் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு வேகமாக பரவி வருகிறது. 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை இரவு நேரங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் இளநீர் குடுவை, பிளாஸ்டிக் கப், டயர் போன்ற பொருட்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதிலிருந்து ஏடிஸ் கொசு உற்பத்தி டெங்கு காய்ச்சலை பரப்பி வருகிறது. 2019ம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 560 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதிகபட்சமாக செப்டம்பரில் 150 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.  தொடர்ந்து, அக்டோபர் மாதம் பிறந்தது முதல் டெங்கு காய்ச்சல் பொதுமக்களை மிரட்டி வருகிறது. தினமும் 10 முதல் 15 பேர் வரை டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு பொது மருத்துவமனை, ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அக்டோபர் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை சுமார் 180 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2019ம் ஆண்டு ஜனவரி முதல் அக்.15ம் தேதி வரை 740 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 45 நாட்களில் மட்டும் 330 பேர் டெங்கு பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி இருப்பதால் டெங்கு காய்ச்சல் மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
  இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையானது பொதுப்பணி, உள்ளாட்சித்துறையுடன் இணைந்து டெங்கு கொசுக்களை அழிக்க களப்பணி, விழிப்புணர்வு பேரணி, புகை மருந்து அடித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 10ம் தேதி முதல் டெங்கு கள ஆய்வு பணியில் மாவட்ட ஆட்சியரும் ஈடுபட்டு வருகிறார். ரெட்டியார்பாளையம், மேட்டுப்பாளையம், லாஸ்பேட்டை, ஒதியஞ்சாலை, அரியாங்குப்பம், கோரிமேடு என தினமும் ஒவ்வொரு பகுதியாக சென்று, அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகளில் களஆய்வு செய்து, கொசு புழுக்கள் உருவாகும் இடங்களை கண்டறிந்து அழித்து வருகிறார். இருப்பினும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் டெங்கு காய்ச்சலை பரவாமல் தடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tags :
× RELATED மேட்டுப்பாளையம் அருகே டெங்கு...