சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை இடித்து அகற்ற கோரிக்கை

நெய்வேலி, அக். 17: கடலூர் மாவட்டம் வடலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பார்வதிபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி கடந்த 1985ம்  ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த காலங்களில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்த நிலையில், தற்போது 200 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில் உள்ள நான்கு கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளதால், அருகில் உள்ள  பள்ளி கட்டிடத்தில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு எட்டு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்குள்ள கட்டிடம் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆனதால்  கட்டிடம் சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்த வகுப்பறை கட்டிடங்களை இடிக்க கணக்கெடுக்கும் பட்டியல் தயாரிக்கப்பட்டும், இதுநாள் வரை கட்டிடத்தை இடித்து அகற்றவில்லை. தற்போது பாழடைந்த கட்டிடங்கள் அருகே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் விளையாடும் போது எதிர்பாராமல் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.

 மேலும் கட்டிடங்களில் கம்பிகள் துருப்பிடித்தும், சுவரில் விரிசல் ஏற்பட்டு அவ்வப்போது கட்டிடங்களில் உள்ள சிமென்ட்  துகள்கள் பெயர்ந்து கீழே விழுகிறது. சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் சில சமூக விரோதிகள் பாழடைந்த பள்ளி கட்டிடங்களை பயன்படுத்தி வருகின்றனர்.ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், இங்குள்ள சேதமடைந்த கட்டிடங்களை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : school buildings ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிக்...