×

மாவட்டத்தில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத்துறை முதன்மை செயலர் ஆய்வு

திருவள்ளூர், அக். 17: திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் அதிகளவில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையை தமிழக சுகாதார துறை முதன்மை செயலர் பீலா ராஜேஷ் நேற்று திடீரென ஆய்வு செய்தார். அங்குள்ள டெங்கு வார்டுக்கு சென்று, நோயாளிகளை பார்த்து, சிகிச்சை முறையாக அளிக்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்திலேயே திருவள்ளூர் மாவட்டத்தில்தான் டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்களும், சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மாவட்டத்தில் மட்டும் கடந்த 10 மாதங்களில் 266 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருந்துள்ளது. இன்று மட்டும் 23 பேர் டெங்கு பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த 10 மாதங்களில் 3400 பேர் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றுள்ளனர். இதுவரை தமிழகத்தில் டெங்குவால் 3 பேர் இறந்துள்ளனர்.டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் அனைத்து பள்ளிகளிலும் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.அப்போது, கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், சுகாதார துறை துணை இயக்குனர் பிரபாகரன், இணை இயக்குனர் தயாளன், கண்காணிப்பாளர் சேகர் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags : Inspector General ,Head Hospital of Mysterious Influenza ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில்...