×

மேற்கூரையில் உடைப்பு, சுவர்களில் விரிசலுடன் இடிந்து தரை மட்டமாகும் நிலையில் குழந்தைகள் படிக்கும் அங்கன்வாடி மையம்

வாலாஜாபாத், அக். 17: வாலாஜாபாத் பேரூராட்சி நேரு நகரில் சிதிலமடைந்த அங்கன்வாடி மையத்தை அகற்றிவிட்டு புதிதாக கட்ட வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர்.வாலாஜாபாத் பேரூராட்சி நேரு நகரில், 800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள குழந்தைகளுக்காக சவுரிமுத்து தெருவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் ஓடுகளால் ஆன அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தின் சுவர்களில், தற்போது ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், மழைநீர் உள்ளே கசிந்து, தண்ணீர் தேங்கி நிற்கிறது.இதனால், குழந்தைகள் படிக்க முடியாமலும், ஆசிரியை பாடம் நடத்த முடியாமலும் கடும் சிரமம் அடைகின்றனர். இந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உள்பட பல்வேறு துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குழந்தைகளின் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘வாலாஜாபாத் பேரூராட்சி நேரு நகரில் 10க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்குள்ள குழந்தைகள் இந்த அங்கன்வாடி மையத்தில் படிக்கின்றனர். இந்த அங்கன்வாடி மையம் தற்போது ஆங்காங்கே சிதலமடைந்து, சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டுபோல இந்த ஆண்டு கனமழை பெய்தால், இந்த கட்டிடம் தரைமட்டமாகி விடும் நிலையில் உள்ளது.மழைக்காலங்களில் மழைநீர் இந்த சிமென்ட் ஓடுகளில் ஒழுகுவதுடன், சுவர்களில் உள்ள விரிசல்களில் கசிந்து, உள்ளே புகுந்துவிடுகிறது. இதனால், குழந்தைகள் உட்கார இடம் இல்லாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியையும் சிரமம் அடைகிறார்.மழைநீர் ஆங்காங்கே தேங்குவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தை அகற்றிவிட்டு, எம்எல்ஏ, எம்பி ஆகியோரின் தொகுதி நிதியில் இருந்து புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.எனவே, இந்த பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டி கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Tags : center ,children ,
× RELATED தொழில் மையத்தில் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கான கருத்தரங்கு