×

திருவொற்றியூர் ராமகிருஷ்ணா நகரில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் மையத்தில் துர்நாற்றம்: தொற்றுநோய் பரவும் அபாயம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் ராமகிருஷ்ணா நகரில் குடியிருப்புகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள குப்பை தரம் பிரிக்கும் மையத்தில் கடும் துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். திருவொற்றியூர் மண்டலம் 5வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, அதே வார்டில் உள்ள ராமகிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்துக்கு எடுத்து வரப்பட்டு அங்கு மக்கும் மக்காத குப்பை தரம் பிரிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த குப்பை தரம் பிரிக்கும் மையத்தில் உரம் தயாரிப்பதற்காக ஆங்காங்கே குடியிருப்புகளில் இருந்து சேகரிக்கப்பட்ட உணவு மற்றும் அழுகிய காய்கறி போன்றவைகளை வைத்து இருப்பதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தரம் பிரிக்கப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் மக்காத குப்பைகளை மூட்டை மூட்டையாக கட்டி அங்கேயே போட்டு வைத்துள்ளனர். மேலும் தேங்காய் மட்டைகள் ஓடுகளையும் குவித்து வைத்துள்ளனர்.

இந்த மையத்தில் இருந்து கழிவுநீர் வெளியேறி அருகில் உள்ள கடலோர காவல்படை அலுவலக வாசலில் தேங்கி நிற்கிறது. இதனால் கடலோர காவல்படை அதிகாரிகளும் மூக்கை பொத்திக்கொண்டு அப்பகுதியில் நடமாடும் அவல நிலை உள்ளது. மேலும் பழுதடைந்த ரிக்சாக்கள், பிளாஸ்டிக் தொட்டிகள் போன்றவற்றையும் மலைபோல் குவித்து வைத்துள்ளனர்.  தற்போது குடியிருப்புகளுக்கு அருகாமையில் கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த தரம் பிரிக்கும் மையத்தை குடியிருப்புகள் அல்லாத இடத்தில் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பலமுறை திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே மக்களின் சுகாதார நலன் கருதி குடியிருப்புகளுக்கு அருகே உள்ள குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தை முறையாக பராமரிக்கவும், வீடுகள் அமைந்துள்ள இடத்தில் இருந்து தொலைவான வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : garbage disposal center ,town ,Ramakrishna ,Thiruvottiyur ,
× RELATED கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தீ: கண்...