×

மாவட்டம் முழுவதும் தொடர் மழை

விருதுநகர், அக். 16: விருதுநகரில் நேற்று காலை முதல் பெய்த தொடர் சாரல் மழையால், பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்; கடைவீதிகள் வெறிச்சோடின. இதனால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு மழை பெய்யாமல் போக்கு காட்டி வந்தது. இந்நிலையில், மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திரயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை 7 மணி முதல் சாரல் மழை விட்டுவிட்டு பெய்து வந்தது. இதை பொருட்படுத்தாமல் மாணவ, மாணவியர் பள்ளிகளுக்கு சென்றனர். பகல் 11.30 மணியளவில் திடீரென தொடங்கிய மழை மதியம் 2 மணி வரை பெய்தது. மழையினால் பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியே வரவில்லை. கடை வீதிகள், பஸ்நிலையங்கள் வெறிச்சோடி கிடந்தன. தீபாவளி பண்டிகைக்கு 10 நாட்கள் உள்ள நிலையில், கடைவீதிகள் வெறிச்சோடின. வானம் இருட்டிய நிலையில் தொடர் சாரல் மழை பெய்தது. அந்தி சாயும் மாலைப்பொழுதாக காட்சியளித்தது.

சிவகாசி: சிவகாசியில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் பைபாஸ் சாலை, மாரியம்மன் கோயில், என்.ஆர்.கே.ஆர் சாலை, நகராட்சி அலுவலகம், திருத்தங்கல் சாலை உட்பட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் ஆறுபோல் ஓடியது. பெரும்பாலான பகுதிகளில் வாறுகால் இல்லாததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சிவகாசியில் பட்டாசு விற்பனையும் பாதிக்கப்பட்டது. இறுதி கட்ட பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது. சிவகாசி அருகே அனுப்பன்குளம், மீனம்பட்டி கிராமங்களில் பெய்த கனமழையால் திடீர் காலனியில் சுமார் 20 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. கோட்டாட்சியர் தினேஷ்குமார், தாசில்தார் ரெங்கநாதன் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் நேரில் பார்வையிட்டனர். தொடந்து அந்த பகுதியில் ஜேசிபி மூலம் தண்ணீர் வரத்துக்கு பாதை ஏற்படுத்தப்பட்டு, தண்ணீர் வடிய ஏற்பாடு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வருவாய்த்துறையினர் உணவுப் பொட்டலங்கள் வழங்கினர்.
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் நேற்று காலை முதல் மதியம் வரை தொடர்ந்து மழை பெய்ததால் சாலை முழுவதும் மழைநீர் ஆறாக ஓடியது. இந்நிலையில் டெலிபோன் ரோட்டில் வாறுகால்கள் முறையாக கட்டப்படாததால் மழைநீர் செல்லமுடியாமல் வர்த்தக சங்கத்தெருவில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து தெருக்களில் ஓடியது. மேலும் வீடுகளுக்குள்ளும் கழிவுநீர் சென்றது. இதை வீட்டில் உள்ள பெண்கள் கழிவுநீரை வெளியேற்றினர். இப்பகுதியில் பாலம் மேடாகவும், சாலை தாழ்வாகவும் இருப்பதால், எப்போது மழை பெய்தாலும் வர்த்தக சங்கத்தெருவில் கழிவுநீர் தெருக்களில் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் வர்த்தக சங்கத் தெருவில் மழை காலங்களில் கழிவுநீர் தெருக்களில் செல்லாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : district ,
× RELATED மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர்...