×

நாலூர் அரசு தொடக்கப்பள்ளியில் சமையல் அறை மேற்கூரை சேதம்

திருச்சுழி, அக். 16: நாலூர் அரசு தொடக்கப்பள்ளியில், சமையல் அறை மேற்கூரை சேதமடைந்துள்ளதால், மழை காலங்களில் பணியாளர்கள் கடும் அவதிப்படுகின்றனர். நரிக்குடி அருகே, நாலூரில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு தலைமையாசிரியர் உள்பட 5 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். சுமார் 105க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளி வளாகத்தில் சமையல் அறை உள்ளிட்ட பழமை வாய்ந்த நான்கு கட்டிடங்கள் உள்ளன. இவைகளில் மேற்கூரை சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. மாணவ, மாணவியருக்கு சாப்பாடு தயார் செய்யும் சமையல் அறை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால், பழைய தொடக்கப்பள்ளி கட்டிடத்தில் சமைத்து வருகின்றனர். மேலும் சமையல் அறை கட்டிடத்தில் விஷஜந்துகள் இருப்பதால், பள்ளி வளாகத்திற்குள் விளையாடும் மாணவ, மாணவியரை கடிக்கும் அபாயம் உள்ளது. மேலும் சமைக்கும் உணவில், பூச்சிகள் விழுந்து விடுமோ என்ற அச்சம் அதிகளவில் உள்ளது என பொறுப்பாளர்கள் புலம்புகின்றனர். மழை காலங்களில் நனைந்தபடியே சமைக்கின்றனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் கல்வி அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என ஆசிரியர்களும் பெற்றோர்களும் புலம்புகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவியரின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து நாலூரைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் பெற்றோர் கூறுகையில்: நாலூரில் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்தப் பள்ளி வளாகத்தில், அமைந்துள்ள பழைய கட்டிடத்தை அகற்றக்கோரி பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

கடந்த முறை மழை பெய்தபோது, திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. அப்போது பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததால் மாணவ, மாணவியர் ஆபத்தின்றி தப்பினர். கட்டிடத்திற்குள் விஷகுழவிகள் அதிகமாக உள்ளன. இதனால், மாணவ, மாணவியர்களை அனுப்ப பெற்றோர் தயங்குகின்றனர். எனவே, பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதிய சமையல் அறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். அறிக்கை கேட்காத அதிகாரிகள்: தமிழகத்தில் ஆண்டுதோறும் பருவமழை தொடங்கும் முன், பள்ளி கட்டிடங்களின் நிலை குறித்து முன்னெச்சரிக்கை அறிக்கை கேட்பர். ஆனால், திருச்சுழி மற்றும் நரிக்குடி பகுதியில் உள்ள பள்ளிக் கட்டிடங்கள் நிலை குறித்து அதிகாரிகள் கேட்பதில்லை என கூறப்படுகிறது.


Tags : government ,Nallur ,primary school ,
× RELATED மேமணப்பட்டி அரசு பள்ளி ஆண்டு விழா