×

சிவகாசியில் சுகாதாரப் பணியாளர் குடியிருப்பு அருகே சமூக விரோதச் செயல் அரங்கேற்றம் இரவு நேரங்களில் பெண்கள் அச்சம்

சிவகாசி, அக். 16: சிவகாசியில்  நகராட்சி சுகாதார பணியாளர்கள் குடியிருப்பு அருகே,  இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடப்பதால், பெண்கள் அச்சமடைந்துள்ளனர். சிவகாசி நகராட்சியில் உள்ள சுகாதாரப் பிரிவில் 130க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்காக கடந்த 2014ல், நேரு காலனியில் 2 ஏக்கர் நிலத்தில் அரசு சார்பில் ரூ.1.40 கோடியில் குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. முதலில் அடுக்குமாடி வீடுகள் கட்ட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. பின், போதிய நிதி வசதி இல்லாததால், முதலில் 20 பணியாளர்களுக்கு மட்டும் அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டன. பின், படிப்படியாக அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் வீடுகள் கட்டி தரப்படும் என அப்போது நகராட்சி நிர்வாகத்தினர் உறுதியளித்திருந்தனர். கட்டி முடிக்க பட்ட வீடுகள் சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

 தற்போது 5 பிளாக்கில் உள்ள 20 அடுக்குமாடி வீடுகளில் சுகாதார பணியாளர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், குடியிருப்பு அருகே, இரவு நேரங்களில் கும்பல், கும்பலாக அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால், பெண்கள் தனியாக செல்ல அச்சப்படுகின்றனர். மேலும், வீடுகளில் உள்ள ஜன்னல்,  கதவுகளை சமூக விரோதிகள் உடைப்பதாக கூறுகின்றனர். இதனால், ரூ.பல லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகள் சேதமைடைந்து வருகின்றன. குடியிருப்பு வளாகம் அருகே குப்பை கழிவுகள், இறைச்சி கழிவுகளை கொட்டி செல்வதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, நகராட்சி சுகாதாரப் பணியாளர் குடியிருப்பு அருகே, சமூக விரோதச் செயல்கள் நடப்பதை தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : health worker ,quarters ,Sivakasi ,
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து