×

2,865 ஏக்கர் பாசனத்திற்கு சோத்துப்பாறை அணையில் தண்ணீர் திறப்பு

பெரியகுளம், அக்.16: சோத்துப்பாறை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 30 கன அடி வீதம் தண்ணிரை தேனி கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவி திறந்து விட்டார். இந்த தண்ணீரால் 2865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பெரியகுளம் அருகே 8 கி.மீ. தொலைவில் சோத்துப்பாறை அணை உள்ளது. சோத்துப்பாறை அணையின் மொத்த உயரம் 126 அடியாகும். கொடைக்கானல் மற்றும் பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழை காரணமாக சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து இருக்கும். தற்போது கடந்த சில நாட்களாக மழை இன்றி சோத்துப்பாறை அணையில் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து வர துவங்கியது. அணைக்கு வரும் நீர்வரத்து 100 கன அடியாகவும், நீர் இருப்பு 100.44 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 100  மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணையிலிருந்து குடிநீருக்காக 3 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

 இந்நிலையில் நேற்று பாசனத்திற்காக சோத்துப்பாறை அணையிலிருந்து தண்ணீரை தேனி கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவ் திறந்து வைத்தார். இந்த தண்ணீர் முதல் 62 நாட்களுக்கு 30 கன அடியாகவும், அடுத்த 31 நாட்களுக்கு 27 கனஅடியாகவும், அடுத்த 50 நாட்களுக்கு 27 கன அடியாகவும் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரால் பெரியகுளம், மேல்மங்கலம், லெட்சுமிபுரம், தாமரைக்குளம் ஆகிய பகுதியில் உள்ள 1,040 ஏக்கர் புன்செய் நிலங்களும், 1825 நன்செய் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் நகராட்சி முன்னாள் சேர்மன் ஓ.ராஜா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் உட்பட அரசு அதிகாரிகள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Tags :
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...