×

தலைமை ஆசிரியருக்கான கலந்தாய்வு கூட்டம்

திருப்பூர், அக். 16:  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியருக்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான கலந்தாய்வு கூட்டம் குமார் நகர், இன்பன்ட் ஜீசஸ் பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது. இக்கூட்டத்தில் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவது குறித்து ஆசிரியர்களிடம் விவாதிக்கப்பட்டன. மேலும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, பள்ளிகளில் டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டன. தாராபுரம், பல்லடம், உடுமலை, திருப்பூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.   இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் பேசியதாவது: பள்ளிகளில் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகள் சீராக நடக்க வேண்டும், தொய்வு இருக்கக்கூடாது. பள்ளி வளாகங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புனரமைப்பது அவசியம்.

ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் பள்ளி வளாகத்தில் மூடிய ஆபத்தில்லா கிணறுகளில் நீரை சேமித்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மழைக்காலத்தில் டெங்கு மற்றும் தொற்று நோய்கள் பரவாமல் இருக்க முன்னெச்சரிகை நடவடிக்கைகளை பள்ளி நிர்வாகம் எடுக்க வேண்டும். மாவட்ட மருத்துவ நலப்பணிகள் துறையுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் அளித்த அறிவுரைகளை உரிய முறையில் தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளில் பின்பற்ற வேண்டும். எமிஸ் இணையதளத்தில் அனைத்து விவரங்களையும் சரிவர அப்டேட் செய்வது அவசியம். இவ்வாறு, அவர் பேசினார்.

Tags : Consultative Meeting ,Headmaster ,
× RELATED விடுதலை சிறுத்தைகள் கூட்டம்