×

அப்துல்கலாம் பிறந்தநாள் விழா

திருப்பூர், அக். 16: அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டி திருப்பூரில் பள்ளிகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் சார்பில் அவரது உருவப்படத்திற்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் 89வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அப்துல் கலாமின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பல பள்ளிகளில் கவிதை, கட்டூரை, பேச்சு போட்டி ஆகியவை நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் திருப்பூர் பகுதிகளில் உள்ள பொதுநல அமைப்புகளின் சார்பிலும், அரசியல் கட்சினர்கள் சார்பிலும் பல்வேறு இடங்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவரின் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.

உடுமலை : உடுமலை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலை பள்ளியில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா, என்எஸ்எஸ் மற்றும் நெகிழி இல்லாத உடுமலை டிரீம் -20 என்ற அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சந்திரன் தலைமை வகித்தார். வேதியியல் ஆசிரியர் ஜெகநாத் ஆழ்வார் சாமி முன்னிலை வகித்தார். மாணவி அகல்யா வரவேற்றார். என்எஸ்எஸ் திட்ட அலுவலர் சரவணன் அப்துல்கலாம் வாழ்க்கை வரலாறு பற்றி பேசினார். இதில் அப்துல்கலாம் பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது. அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் நெகிழி இல்லா உடுமலை டிரீம்-20 அமைப்பாளர் பாலமுருகன் மற்றும் நந்தகுமார் ஆகியோர் நெகிழி இல்லா உலகம் அமைப்பது பற்றி பேசினர். மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு ரெயின்போ எப்எம் அறிவிப்பாளர் விஜயகுமார் பரிசுகள் வழங்கினார்.

Tags : Abdulkalam ,birthday party ,
× RELATED வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில்...