×

நடைபாதையில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

ஊட்டி, அக். 16: காந்தல்  காமராஜ் நகர் பகுதியில் நடைபாதையில் உள்ள குப்பைகள் பல நாட்களாக  அகற்றப்படாமல் உள்ளதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால்  பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 26வது வார்டு பகுதியை  சேர்ந்த காந்தல் காமராஜ் நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து  வருகின்றனர். இப்பகுதியில் சிலர் குப்பைத் தொட்டிகளில் குப்பைகளை  கொட்டாமல், சாலைகளிலும், நடைபாதைகளிலும், கழிவு நீர்  கால்வாய்களிலும் கொட்டுகின்றனர். இதனால், நடைபாதைகள் குப்பை  மேடுகளாக காட்சியளிப்பது மட்டுமின்றி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள்  மூக்கை பிடித்துக் கொண்டே செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும்,  இவ்வழித்தடத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லும்  நிலையில் அவர்களுக்கு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில்  குப்பைகளை கொட்ட வேண்டாம். கழிவு நீர் கால்வாய்களில் இருந்து  எடுக்கப்படும் மண் குவியல்களை நடைபாதையில் போட வேண்டாம் என பொதுமக்கள்  கேட்டுக் கொண்டாலும் அதை நகராட்சி ஊழியர்கள் கண்டுக் கொள்வதில்லையாம். இந்நிலையில், இதை அகற்றக் கோரி நேற்று அப்பகுதி மக்கள் போராட்டத்தில்  ஈடுபட முயன்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதை  தொடர்ந்து, அங்கு வந்த நகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் அவர்களை சமாதானம்  செய்தனர். மேலும், உடனடியாக அப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றப்படும் என  தெரிவித்துக் கொண்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : protest ,removal ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...