×

திருப்பூர், நீலகிரி உள்பட 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி ஆய்வுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமனம்

கோவை, அக். 16: தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி உள்பட 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துவங்கவுள்ள நிலையில், இது தொடர்பாக ஆய்வு செய்ய சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.  மத்திய அரசு நாடு முழுவதும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் புதியதாக 31 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் துவங்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் நீலகிரி, திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது. இந்த புதிய மருத்துவ கல்லூரிகளில் தலா 150 எம்.பி.பி.எஸ் இடங்கள் நிரப்பப்படும் என தெரிகிறது. இதனால், மாநிலத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியின் எண்ணிக்கை 30 ஆகவும், எம்.பி.பி.எஸ் இடங்கள் 4,250ஆகவும் அதிகரிக்கவுள்ளது. இந்நிலையில், புதிய மருத்துவக்கல்லூரிகள் துவங்கவுள்ள மாவட்டங்களில் சிறப்பு அலுவலர்கள் நியமித்து ஆய்வு செய்ய அரசு சார்பில் முடிவு செய்துள்ளனர்.
 
அதன்படி, அருகில் உள்ள மருத்துவக்கல்லூரி டீன்கள் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்படவுள்ளனர். இவர்கள், சம்மந்தப்பட்ட மாவட்டங்களில் சென்று மருத்துவக்கல்லூரி அமைவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு அறிக்கையை அரசிற்கு அனுப்பவுள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் ஏற்படுத்துவது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு கோவை அரசு மருத்துவமனையின் டீனும், நாமக்கல் மாவட்டத்திற்கு சேலம் அரசு மருத்துவமனை டீனும், திண்டுக்கல் மாவட்டத்திற்கு மதுரை அரசு மருத்துவமனை டீனும் சிறப்பு அலுவலராக நியமிக்கப்படவுள்ளனர்.

Tags : inspection ,Government Medical College ,districts ,Nilgiris ,Tirupur ,
× RELATED நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு கொரோனா பாதிப்பு