×

கோவை-பழநிக்கு நிரந்தர ரயில் சேவை

கோவை, அக்.16: கோவை-பழநி மார்க்கத்தில் நிரந்தர ரயில் சேவை நேற்று துவங்கியது. கோவைக்கும் பழநிக்கும் இடையே நிரந்தர ரயில் சேவை (சேவா பாசஞ்சர் ரயில்) துவக்க விழா நேற்று கோவை ரயில் நிலையத்தில் நடந்தது. இந்த புதிய ரயில் சேவையை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் துவக்கி வைத்தார். விழாவில், சேலம் டிவிசன் கூடுதல் கோட்ட மேலாளர் அண்ணாதுரை, கோவை எம்.பி. பி.ஆர் நடராஜன், எம்.பி.க்கள் செல்வராஜ், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், அம்மன் அர்ஜூனன் எம்.எல்.ஏ., ேகாவை ரயில் நிலைய இயக்குநர் சதீஷ் சரவணன், முதுநிலை கோட்ட இயக்குநர் ஹரிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  கோவை-பழநி பாசஞ்சர் ரயில் மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.40 மணிக்கு பழனி சென்றடையும்.

போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலை, மைவாடி சாலை, மடத்துக்குளம், புஷ்பத்தூர் ரயில் நிலையம் வழியாக இந்த ரயில் செல்லும். மதியம் 2.10 மணிக்கு ரயில் பழநியில் புறப்பட்டு கோவை வரும். 7 நாட்களும் இந்த ரயில் நிரந்தரமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி சிறப்பு ரயில் என்ற வகையில் இந்த ரயில் சேவை துவங்கியது. தற்போது நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து 25 ரூபாய் கட்டணத்தில் பழநி செல்ல முடியும். இது தவிர பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கும், கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கும் இயங்கிய பாசஞ்சர் ரயில் நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் காலை 7.30 மணிக்கு புறப்படும் ரயில் 8.40 மணிக்கு கோவை வந்தடையும்.

காலை 5.45 மணிக்கு கோவையில் புறப்படும் ரயில், காலை 7 மணிக்கு பொள்ளாச்சி சென்றடையும். இந்த ரயில் ஞாயிறு தவிர அனைத்து நாட்களும் இயக்கப்படும். கோவையில் இருந்து கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் சிறப்பு ரயிலாக இந்த ரயில் இயக்கப்பட்டு, தற்போது நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. 15 ரூபாய் கட்டணத்தில் பொள்ளாச்சி செல்ல முடியும். நிரந்தர ரயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. விழாவில் கோவை எம்.பி. பி.ஆர் நடராஜன் பேசுகையில், ‘‘ கோவையில் இருந்து ராமேஸ்வரம், தூத்துக்குடி, கொச்சினுக்கு தனி ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கோவையில் இருந்து பெங்களூருக்கு இரவு நேர ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், ’’ என்றார்.

Tags : Coimbatore ,Palani ,
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு