×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி சந்தையில் விற்பனை ஜோர்

ஈரோடு, அக்.16: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி சந்தையில் வியாபாரம் அமோகமாக நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள ஜவுளி சந்தையில் நிரந்தர கடைகள் மற்றும் வாரச்சந்தை கடைகள் என 1,200க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடக்கும் ஜவுளி சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஜவுளிகளை மொத்தமாக கொள்முதல் செய்வது வழக்கம். சீசன் இல்லாத காலகட்டத்தில் வாரந்தோறும் ரூ.75 லட்சம் வரை ஜவுளிகள் விற்பனையாகும். தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ், ஓணம் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ரூ.3 கோடி வரை ஜவுளிகள் விற்பனையாகும். இந்நிலையில், தற்போது செயல்பட்டு வரும் ஜவுளி சந்தையை ஒருங்கிணைந்த வணிக வளாகமாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதால் கடைகளை காலி செய்யும்படி மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால், பெரும்பாலான கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன.

இதனால், கடந்த 2 மாதமாக வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, வியாபாரம் பாதிக்காத வகையில் ஜவுளி சந்தையின் ஒரு பகுதியில் கடைகள் அமைத்து விற்பனை செய்து கொள்ள அனுமதி வழங்கியதால் கடந்த வாரத்தில் இருந்து தீபாவளி சீசன் விற்பனை துவங்கி நடந்து வருகிறது. நேற்று நடந்த ஜவுளி சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிறு மற்றும் மொத்த வியாபாரிகள் அதிகளவில் கலந்து கொண்டு ஜவுளிகளை கொள்முதல் செய்தனர். இதேபோல், பொதுமக்களும் ஜவுளிகளை வாங்கி சென்றனர்.

இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறியதாவது: கடந்த பல மாதமாக வியாபாரம் ஏதும் இன்றி மிகவும் கஷ்டப்பட்டு வந்தோம். தற்போது, தீபாவளி வியாபாரம் கை கொடுத்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்த வியாபாரிகள் அதிகளவில் வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலைகள், ஜரிகை வேலைப்பாடு கொண்ட சேலைகள், சுடிதார், லெக்கின்ஸ், ஆண்களுக்கான ரெடிமெட் துணி வகைகள், குழந்தைகளுக்கான துணி வகைகள், வெள்ளை வேட்டிகள், சட்டைகள் அதிகளவில் விற்பனையாகி உள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு ரெடிமெட் ரகங்கள் மட்டும் பீஸ் ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரையில் விலை உயர்ந்துள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் ரூ.3 கோடி வரை வியாபாரம் ஆனது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Diwali ,
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...