×

பாதாள சாக்கடை திட்ட பேச்சுவார்த்தை சுமூக உடன்பாடு ஏற்படாததால் அனைத்துக் கட்சியினர் வெளிநடப்பு

சத்தியமங்கலம், அக்.16:பாதாள சாக்கடை திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படாததால் அனைத்துக் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். சத்தியமங்கலம் நகராட்சியில் ரூ.55 கோடி செலவில் பாதள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டத்தில், பவானி ஆற்றங்கரையில் ஐயப்பன் கோயில் அருகே நீரேற்று நிலையமும், கோட்டுவீராம்பாளையம் மின்மயானம் அருகே சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டு வருகிறது. பவானி ஆற்றங்கரையில் நீரேற்று நிலையம் மற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதி இல்லை என்றும், ஆற்றுப்படுகையில் இருந்து 5 கி.மீ. தூரம் தள்ளி அமைக்க வேண்டும் என்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியது. ஆனால், பாதாள சாக்கடை கழிவுநீரை பவானி ஆற்றில் கலக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினர், மக்கள் நல கூட்டமைப்பு மற்றும் பொதுமக்கள் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில், இப் பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமை தாங்கினார். தாசில்தார் கணேசன், சத்தி நகராட்சி பொறியாளர் ரவி மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில், திமுக சார்பில் நகர பொறுப்பாளர் ஜானகி, மக்கள் நல கூட்டமைப்பு தலைவர் ஆனைக்கொம்பு ஸ்ரீராம், இந்திய கம்யூ., சார்பில் ஸ்டாலின் சிவக்குமார், அனைத்து வணிகர் சங்க தலைவர் ஜவகர் மற்றும் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிவுறுத்தலின்படி நீரேற்று நிலையம் மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தை ஆற்றுப்படுகையில் இருந்து 5 கி.மீ. தூரம் தள்ளி அமைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு   அதிகாரிகள் சரிவர பதிலளிக்காததால் கூட்டத்தில் கலந்துகொண்ட  அனைத்துக்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பேச்சுவார்த்தை கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படாததால் பாதாளசாக்கடை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் போராட்டம் நடைபெறும் என அனைத்துக்கட்சியினர் தெரிவித்தனர்.

Tags : parties ,sewer project talks ,
× RELATED ஊடகங்களை மிரட்டுபவர்கள் மீது...