×

பேசியபடி ஊதியம் வழங்க கோரி நகராட்சியை முற்றுகையிட்ட துப்புரவு பணியாளர்கள்

ஒட்டன்சத்திரம், அக். 16: ஊதியத்தை உயர்த்தி வழங்க கோரி ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு 110 பெண் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நபர் ஒருவருக்கு ஒரு நாள் ஊதியமாக ரூ.332 பேசப்பட்டது. ஆனால் பேசியபடி ரூ.332 வழங்காமல் ரூ.285 மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பேசியபடி சம்பளத்தை வழங்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த துப்புரவு பணியாளர்கள் நேற்று காலை பணியை புறக்கணித்து ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து சிஐடியு கன்வீனர் முருகேசன் கூறுகையில், ‘திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகள் தரம் பிரிக்கும் பணியையும் நாங்கள்தான் செய்து வருகிறோம். துப்புரவு பணிக்கு தேவையான கையுறை, துடைப்பம், மண்வெட்டி ஆகியவற்றை எங்களுடைய செலவிலேயே கொண்டு வர சொல்கின்றனர். இதனால் பணியாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். ஒப்பந்ததாரர் பேசியபடி சம்பளத்தை தராமல் குறைந்து வழங்கி வருகிறார். பேசியபடி சம்பளத்தை வழங்க கோரியும் கண்டுகொள்ளாததால் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஒப்பந்ததாரர் வந்து பேசியபடி ஊதியத்தை கொடுப்பேன் என உத்தரவாதம் அளித்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம்’ என்றனர்.ஆனால் மாலை வரை ஒப்பந்ததாரர் வராததால் துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தை தாங்களாகவே கைவிட்டு கலைந்து சென்றனர்.


Tags : cleaning workers ,municipality ,
× RELATED திருப்பத்தூர் நகராட்சியில் பரபரப்பு...