×

தொழில் முனைவோர் பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அழைப்பு

திருவாரூர், அக்.16: திருவாரூர் மாவட்டத்தில் தொழில் முனைவோர் பயிற்சி பெறுவதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
படித்த இளைஞர்களுக்குரிய பயிற்சி அளித்து அவர்களை முதல் தலைமுறை தொழில்முனைவோராக உருவாக்குவதற்கு தமிழக அரசு சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த திட்டத்திற்கு நடப்பாண்டில் திருவாரூர் மாவட்டத்திற்கு என 16 தொழில்முனைவோர்களுக்கு மானியமாக வழங்குவதற்கு ரூ ஒரு கோடியே 56 லட்சத்து 80 ஆயிரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இளங்கலை மற்றும் முதுகலை பட்டயப்படிப்பு மற்றும் ஐடிஐ போன்றவற்றில் தொழிற் பயிற்சி கல்வி தகுதி பெற்றிருப்போர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒரு மாத காலம் வரையில் தொழில்முனைவோர் பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்யப்படும். அதன் பின்னர் வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும்.

இத்திட்டத்தின் மூலம் தொழில் துவங்கும் தொழில்முனைவோருக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் வரையில் முதலீட்டு மானியமும் 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும் என்பதுடன் சிறப்பு பிரிவினர்களான மகளிர், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயதுவரம்பு 45 வரையில் இருக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். எனவே விருப்பம் உள்ளவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் இதற்கான விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.


Tags : Anyone ,
× RELATED தமிழக சட்டமன்ற தேர்தல்: நடிகர்...