×

குளித்தலையில் நிரந்தர பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் சட்டப்பேரவை குழு தலைவருக்கு மனு

குளித்தலை, அக். 16: கரூர் மாவட்டம் குளித்தலை பொதுமக்கள் சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழு தலைவருக்கு குளித்தலையில் நிரந்தர பேருந்து நிலையம் அமைத்து தரக்கோரி கோரிக்கை மனு அனுப்பி வைத்துள்ளனர்.அதில் குறிப்பிட்டுள்ளதாவது:தமிழகத்திலேயே நகராட்சியாக இருந்தும் பேருந்து நிலையம் அமைக்க முடியாத நகராட்சி குளித்தலை நகராட்சி மட்டுமே. திருச்சி மாவட்டத்திலிருந்து கரூர் மாவட்டம் 1995ம் ஆண்டு பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் குளித்தலை பேரூராட்சி ஆனது. அதன் பிறகு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.அவ்வாறு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 25 ஆண்டுகள் ஆகியும் குளித்தலை நகருக்கு நிரந்தர பேருந்து நிலையம் எட்டாத கனியாகவே இருந்து வருகிறது. இந்நிலை குறித்து பொதுமக்கள் நூற்றுக்கணக்கான மனுக்கள் அனுப்பியும், பல போராட்டங்கள் நடத்தியும் இன்று வரை குளித்தலையில் நிரந்தர பேருந்து நிலையத்திற்கான வேலைகள் தொடங்கப்படவில்லை.குளித்தலை நகரத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குளித்தலை நகரானது வருவாய் கோட்ட தலைநகரமாகவும் வருவாய் வட்டத்தின் தலைநகராகவும் கல்வி மாவட்டத்தின் தலைநகராகவும் உள்ளது.

மேலும் ஒருங்கிணைந்த நீதிமன்றம், காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் போன்ற அரசு நிறுவனங்களும் 10க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் வங்கிகளும் உள்ளன.ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினசரி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். அதுமட்டுமில்லாது உழவர் சந்தை வாரசந்தை, ரயில் நிலையம், வேளாண்மை துறை அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், அரசு பொதுப்பணித்துறை அலுவலகம், போக்குவரத்து பணிமனை, தலைமை தபால் நிலையம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் இப்படி அனைத்து அலுவலகங்களுக்கும் தினசரி ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.ஆனால் தற்போது உள்ள பேருந்து நிலையம் வாடகை இடத்தில் நான்கு பேருந்துகள் நிற்கும் வகையில் சிறிய அளவில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இது மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் போதிய வசதிகள் பெற்ற பேருந்து நிலையமாக இல்லை.அதனால் குளித்தலை பொதுமக்கள் நீண்டகாலமாக குளித்தலை நகரத்தில் ஒரு நிரந்தர பேருந்து நிலையம் வேண்டும் என போராடி வருகிறோம் இந்நிலை குறித்து தமிழ்நாடு சட்டமன்ற குழு பரிசீலனை செய்து குளித்தலை நகருக்கு நவீன வசதிகளுடன் கூடிய புதியதொரு நிரந்தர பேருந்து நிலையம் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags : committee ,bus stand ,
× RELATED தனியார் கல்லூரி நிர்வாகங்கள் 25% வரை...