×

தாந்தோணிமலை 47வது வார்டு பாரதியார், வாஞ்சிநாதன் தெருக்களில் வீடு வீடாக டெங்கு தடுப்பு பணிகள் கலெக்டர் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

கரூர், அக். 16: கரூர் மாவட்டம் முழுதும் அனைத்து பகுதிகளிலும் டெங்கு தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கரூர் நகராட்சி தாந்தோணிமலை 47வது வார்டு பாரதியார் தெரு மற்றும் வாஞ்சிநாதன் தெரு பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்பு பணிகளை கலெக்டர் அன்பழகன் பார்வையிட்டு வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் இது குறித்து கலெக்டர் கூறுகையில்,கரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை கண்காணித்திடவும் ஊரக பகுதிகளிலும், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கும் குறுவட்ட அளவிலும், வார்டு வாரியாகவும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவுகிறதா என்பது குறித்தும், டெங்கு வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.டெங்கு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் அலுவலர்கள் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் குடிநீரை மூடி வைத்து தூய்மையாக பயன்படுத்துகிறார்களா என ஆய்வு செய்கின்றனர். நீர்த்தொட்டிகளில் குளோரின் பவுடர் இருந்தாலோ, சுற்றுப்புறங்களில் நீர் தேங்கியிருந்தாலோ அது குறித்து போதிய விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

ஏடிஸ் கொசு குறித்தும், அதன் வளர்ச்சி குறித்தும் பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. டெங்கு தடுப்பு பணிக்காக நகராட்சி பகுதிகளில் 225 கொசு அழிப்பு பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு அவர்கள் ஒரு நாளைக்கு 50 வீடுகள் வீதம் கொசு அழிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும் 47வது வார்டு பகுதி பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.பொதுமக்களும் தங்களால் இயன்ற அளவு முழு ஒத்துழைப்பு கொடுத்து தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்க முன்வர வேண்டும். தங்கள் வீட்டைச் சுற்றி தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள், உடைந்த மண்பானை இருந்தால் உடனடியாக அவற்றை அகற்ற வேண்டும். குளிர்சாதனப் பெட்டி பின்புறம் உள்ள பெட்டியில் தேங்கும் நீரை அவ்வப்போது வெளியேற்ற வேண்டும் என்றார்.ஆய்வின் போது, நகராட்சி ஆணையர் (பொ) ராஜேந்திரன், நகர்நல அலுவலர் ப்ரியா, உதவி பொறியாளர் நக்கீரன் உட்பட அனைவரும் உடனிருந்தனர்.

Tags : Collector of Anandhakahan ,streets ,Ward Bharatiyar ,
× RELATED அதிகார நந்தி வாகனத்தில் உலா வந்த...