×

மரக்காணம்-மதுராந்தகம் வழித்தடத்தில் அரசு பேருந்து சேவை நிறுத்தம் பொதுமக்கள் கடும் அவதி

மரக்காணம், அக். 16: மரக்காணம்-மதுராந்தகம் வழித்தடத்தில் அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மரக்காணம்-மதுராந்தகம் வழித்தடத்தில் கந்தாடு, ஆலத்தூர், அசப்பூர், சூணம்பேடு, வடகோட்டிப்பாக்கம் உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் ஆவர். இந்த வழித்தடம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னை, புதுவை செல்லும் முக்கிய சாலையாக இருந்தது. ஆனால் இ.சி.ஆர் சாலை அமைக்கப்பட்ட பிறகு பெரும்பாலான வாகனங்கள் அந்தசாலை வழியாக செல்வதால் பிரதான சாலையாக இருந்த மரக்காணம்-மதுராந்தகம் வழித்தடத்தில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்தது. இதனால் இச்சாலை வழியாக ஆரம்பம் முதல் இயக்கப்பட்ட 83 அ என்ற தடத்தில்  சில அரசு பேருந்துகளும், 162 என்ற தடத்தில் இரண்டு அரசு பேருந்துகள் மற்றும் 3 தனியார் பேருந்துகளை மட்டுமே தொடர்ந்து இயக்கி வந்தனர்.

இந்த பேருந்துகளில்தான் இப்பகுதியில் உள்ளவர்கள் சென்னை, புதுவை போன்ற வெளியிடங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. இதில் அரசுக்கு சொந்தமான 83 அ என்ற பேருந்து புதுவையில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கு மரக்காணம் வழியாக சென்னை செல்லும். இந்த பேருந்தில்தான் இப்பகுதியில் உள்ள மாணவர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் சென்னை, மதுராந்தகம், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வார்கள். ஆனால் கடந்த சில மாதமாக இந்த பேருந்தையும், மதியம், மாலை நேரங்களில் செல்லும் அரசு பேருந்துகளையும் ஏதோ காரணத்தினால் அதிகாரிகள் நிறுத்தி விட்டதாக பொதுமக்கள் புலம்பி தவிக்கின்றனர். இதேபோல் இந்த வழித்தடத்தில் இயக்கிய 162 என்ற எண்ணில் இயக்கப்பட்ட இரண்டு அரசு பேருந்துகளை முற்றிலுமாக நிறுத்திவிட்டதால் இப்பகுதியில் உள்ளவர்கள் குறித்த நேரத்தில் சென்னை, புதுவை செல்ல வேண்டும் என்றால் மரக்காணம், திண்டிவனம் ஆகிய இடங்களுக்கு வந்துதான் மற்ற இடங்களுக்கு செல்லும் அவல நிலை உள்ளது.எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி முன்பு போல் மரக்காணம், சூணாம்பேடு, மதுராந்தகம் வழியாக சென்னை, புதுவைக்கு இயக்கப்பட்ட அனைத்து அரசு பேருந்துகளையும் மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை  வைத்துள்ளனர். 

Tags :
× RELATED புதுச்சேரி, கடலூர் பஸ் போக்குவரத்து...