×

இடிந்து விழும் நிலையில் நியாய விலை கடை

சேத்தியாத்தோப்பு, அக்.16: சேத்தியாத்தோப்பு அருகே கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பண்ணப்பட்டு கிராமத்தில் நியாய விலை கடை கட்டிடம் உள்ளது. இந்த நியாய விலை கடையில் குடும்ப அட்டையின் எண்ணிக்கை 600க்கு மேல் உள்ளது. கிராம மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான சர்க்கரை, அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய் ஆகியவற்றை இங்கு வந்து வாங்கி செல்கின்றனர். இக்கட்டிடம் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதனால் தற்போது இக்கட்டிடம் தரைதளம் பெயர்ந்தும், மேற்கூரை சிமென்ட் காரைகள் விழுந்தும், சுவர்கள் விரிசல் விட்டும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இக் கட்டிடத்தில் இருப்பு வைக்கப்படும் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வீணாகி வருகின்றது. மேலும் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் விற்பனையாளர்கள் அச்சத்தில் உள்ளனர். பொருட்களை வாங்க வரும் பொதுமக்களும் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர். இக்கட்டிடத்தின் நிலை குறித்து பலமுறை கிராம மக்கள் புகார் மனு அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்ஞ்சாட்டுகின்றனர். எனவே கடலூர் மாவட்ட கூட்டுறவுத்துறை பதிவாளர் மற்றும் மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி  விரைந்து போர்க்கால அடிப்படையில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : price shop ,
× RELATED கோபிச்செட்டிபாளையத்தில் நியாய...