×

கடலூரில் ஒரு நாள் மழைக்கே அவலம் மின்திட்ட பணிக்காக தோண்டிய பள்ளத்தில் நீர் தேங்கி சாலை சேதம்

கடலூர், அக். 16:  கடலூரில் நேற்று ஒரு நாள் பெய்த மழைக்கே மின் திட்ட பணிக்காக ேதாண்டப்பட்ட பள்ளத்தால் சாலை சேதமடைந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடலூர் கடலோர பகுதியில் அமைந்துள்ள நகர் என்ற நிலையில் இயற்கை சீற்றங்களினால் பல பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதற்கிடையே மின் திட்ட பணியை மேம்படுத்தும் வகையில் கடலூர் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின் புதைவட திட்ட பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூன்று கட்டங்களாக இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில் நத்தப்பட்டு முதல் ஆள்பேட்டை வரையிலான பகுதியில் வருகிற மார்ச் மாதம் பணி நிறைவடைகிறது. இதன் ஒரு பகுதியாக கடலூர் ஆள்பேட்டை, கோண்டூர், சாவடி, ரட்சகர் நகர், குறிஞ்சிநகர், ஜோசப் நகர், நத்தப்பட்டு, ராம்நகர், ரெயின்போ நகர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 150 பகுதியில் சாலைகளின் இரு பக்கங்களிலும் பள்ளம் தோண்டப்பட்டு அதில் மின் கேபிள்கள் புதைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்கிடையே மழை காலம் தொடங்கியுள்ள நிலையில் போதிய திட்டமிடல்கள் இல்லாமல் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தோண்டப்பட்ட சாலை முழுவதும் சேதமடைந்து போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கடலூரில் நேற்று முன்தினம் இரவு பெய்து வந்த ஒரு நாள் மழைக்கே சாவடி, கோண்டூர், காவேரி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சாலை சேரும், சகதியுமாக மாறி உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்ல புறப்பட்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

 சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் திணறினர். பல்வேறு இடங்களில் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி மீட்க  முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் கேட்டபோது திட்டத்தை மேற்கொண்டு வரும் காண்ட்ராக்ட் தரப்பினருக்கு போதிய மின்தளவாட பொருட்கள் கிடைக்காததால் பணி நிறைவு செய்ய முடியாத நிலையில் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட குடியிருப்பு மக்கள் கூறுகையில்; போதிய திட்டமிடல் இல்லாமல் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் பல நாட்களாக உள்ளது. தற்போது ஒரு நாள் மழைக்கே பள்ளம் எது, சாலை எது என்று தெரியாத அளவிற்கு சேறும், சகதியுமாக சாலை மாறி மக்கள் கடந்து செல்வதற்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதே நிலை நீடித்தால் கடலூர் புறநகர் பகுதியில் உள்ள நகர பகுதிகள் தீவுகளாக மாறும். எனவே போர்க்கால அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொது நல அமைப்புடன் கலந்துபேசி உரிய திட்டங்களோடு விரைந்து இப்பணியை முறையாக செயல்படுத்த வேண்டும். மேலும் உடனடியாக சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்றனர்.

Tags : roadway ,Cuddalore ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!