×

வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் நவ.18ம் தேதி வரை நீட்டிப்பு வாக்காளர்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு

சேலம், அக்.16: வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2020ன் முன்னேற்பாடு பணிகளாக வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தினை, இந்திய தேர்தல் ஆணையம் நவ.18ம் தேதி நீட்டிப்பு செய்துள்ளது. இதனை சேலம் மாவட்ட வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் ராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையம் 2020ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகளின் முன்னேற்பாடு பணிகளாகவும், ஆரோக்கியமான வாக்காளர் பட்டியலை தயாரிக்கவும் வாக்காளர் பட்டியலில் உள்ள விபரங்களை வாக்காளர்கள் சரிபார்த்து அதனை உறுதி செய்யும் விதமாகவும் ‘வாக்காளர் சரிபார்ப்பு திட்டம்’ செப்.1ம் தேதி செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தின் மூலம் வாக்காளர்கள் வாக்காளர்களின் விவரங்கள் மற்றும் புகைப்படங்களில் மாற்றங்கள் ஏதேனும் இருப்பின் அதனை சரி செய்து கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை பெறுதல் மற்றும் அவர்களின் விபரங்களை சரிபார்த்தல், வாக்காளர்களுக்கான சேவைகளை சரியான முறையில் வழங்கிட ஏதுவாக வாக்காளர்களின் கைபேசி எண்கள் பெறுதல் மற்றும் புவியியல் அமைப்பினை பெறுதல், வாக்காளர் தற்போது உள்ள வாக்குச்சாவடியில் ஏதேனும் மாற்றம் செய்ய தேவை உள்ளதா? அல்லது சரியாக உள்ளதா? என்றவிவரங்கள் சேகரித்தல், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்துதல், வாக்காளர் பட்டியலை மேம்படுத்துதல் போன்ற வசதிகளைப்பெறலாம்.

வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் செய்ய நவ.18ம் தேதி வரை இந்திய தேர்தல் ஆணையம் நீட்டிப்பு செய்துள்ளது. திட்டத்தின் வாயிலாக வாக்காளர், அடையாள அட்டை எண் அல்லது வாக்காளர் பட்டியல் வரிசை எண் கொண்டு அதில் உள்ள விபரங்களை சரிபார்த்து பின்னர் எந்த விவரத்தில் மாற்றம் செய்ய வேண்டுமோ அவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் வாக்காளர் சரிபார்ப்பு பணிக்கென சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் இ.சேவை மையங்களிலும் 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்காளர் சேவை மையங்களிலும் மேற்கொள்ளலாம். தங்கள் பாகத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமும் நேரடியாக மனுக்கள் அளிக்கலாம். மாற்றுத் திறானாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் 1950 கட்டணமில்லா தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு இச்சேவையினை பெறலாம். திருத்தம் தொடர்பான படிவங்கள் பெறப்பட்டு ஜனவரி 2020ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு கலெக்டர் ராமன் கூறியுள்ளார்.

Tags : extension voters ,
× RELATED தேர்தல் விதிகள் குறித்து அனைத்து கட்சி கூட்டம்