×

சூளகிரி அருகே ஏரி கால்வாயில் ரசாயன கழிவு கொட்டிய தொழிற்சாலை முற்றுகை

சூளகிரி, அக்.16: சூளகிரி அருகே அகரம் கிராமத்தில் ஏரி கால்வாயில் ரசாயன கழிவை கொட்டிய தனியார் தொழிற்சாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சூளகிரி தாலுகா பீர்ஜேபள்ளி ஊராட்சியில், அகரம் கிராமத்தில் வனப்பகுதியையொட்டி, தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் அரவை செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு அருகில் பீர்ஜேப்பள்ளி ஏரிக்கு செல்லும் கால்வாய் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த ஏரிக்கால்வாயில் மர்ம நபர்கள் லாரிகளில் கொண்டு வந்து கெமிக்கல் கழிவை கொட்டி சென்றுள்ளனர். இதனால், நேற்று காலை அவ்வழியாக சென்றபோது கடும் துர்நாற்றம் வீசியதால், கிராம மக்கள் அவதியடைந்தனர். அதை தொடர்ந்து, கொம்பேபள்ளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ் மற்றும் உத்தனபள்ளி பகுதி விவசாய மன்ற தலைவர் அழகேஷ் மற்றும் பீர்ஜேபள்ளி, அகரம், உத்தனபள்ளி, கொம்பேபள்ளி பகுதியை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தனியார் அரவை தொழிற்சாலையை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த உத்தனபள்ளி இன்ஸ்பெக்டர் சிவலிங்கம், வனவர் காளியப்பன், வருவாய் அலுவர் மங்கையர்கரசி, கிராம நிர்வாக அலுவலர் அகிலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமச்சந்திரன், விமல் ரவிக்குமார் ஆகியோர் விரைந்து சென்று கெமிக்கல் கொட்டிய ஏரி கால்வாயை பார்வையிட்டு தனியார் கம்பெனியில் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏரி கால்வாயில் கெமிக்கல் கழிவுகளை கொட்டியது ஓசூர் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனி என்பது தெரியவந்தது. இதையடுத்து, செப்டிக் டேங்க் கிளீனர் லாரி மூலம் கால்வாயில் இருந்த கெமிக்கல் கழிவுகளை உறிஞ்சி ஓசூரில் உள்ள அந்த தனியார் கம்பெனிக்கே திருப்பி அனுப்பினர். தொடர்ந்து, தனியார் கம்பெனி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுககையில், அதிகாரிகள் விசாரணை நடத்தி கொண்டிருக்கும்போதே நேற்று மதியம் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இதனால், பரபரப்பான அதிகாரிகள் செப்டிக் டேங்க் கிளீனிங் லாரியை வரவழைத்து கெமிக்கலை உறிஞ்சி அப்புறப்படுத்தினர். கால்வாயில் இருந்த கெமிக்கலில் மழைநீர் கலந்திருந்தால், அது ஏரிக்கு சென்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். கெமிக்கல் கழிவை கொட்டிய தனியார் கம்பெனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Siege ,Chemical Waste Plant ,Sulagiri ,Lake Canal ,
× RELATED லட்சக்கணக்கில் விவசாயிகள் முற்றுகை...