×

வாலாஜாபாத் ஒன்றியம் வெண்குடி கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத சமுதாய நலக்கூட கட்டிடம்

வாலாஜாபாத், அக்.16: வாலாஜாபாத் ஒன்றியம் வெண்குடி கிராமத்தில், அடிப்படை வசதிகள் இல்லாமல் சமுதாய நலக்கூடம் பூட்டியே கிடக்கிறது. இதை சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது எப்போது என பொதுமக்கள் எதிர்ப்பார்த்து காத்துகிடக்கின்றனர்.  வாலாஜாபாத் ஒன்றியம் கீழ் ஒட்டிவாக்கம் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்டது, வெண்குடி கிராமம். இந்த கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இந்த ஊராட்சி மக்கள், தங்களது குடும்பத்தில் திருமணம், நிச்சயதார்த்தம், பிறந்தநாள், காத்து குத்து விழா, மஞ்சள் நீராட்டு விழா, வளைகாப்பு உள்பட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடத்த வேண்டுமானால், சுமார் 5 கிமீ தூரம் உள்ள வாலாஜாபாத் பகுதியில் தனியார் திருமண மண்டபங்களில் நடத்துகின்றனர். இதனால், பண விரயமும், நேர விரயமும் அதிகமாகிறது.இதையொட்டி, தங்களது பகுதியிலேயே சுப நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் சமுதாயக் கூடம் அமைத்து தர வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் வலியுறுத்தினர்.இதைதொடர்ந்து, கடந்த 2008ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வெண்குடி பகுதியில் ஒரு சமுதாய கூடம் கட்டப்பட்டது. இங்கு அடிப்படை வசதிகளான கழிப்பறை, சமையலறை, குடிநீர், உணவு பரிமாறும் பகுதி என எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. இதனால், தற்போது இந்த சமுதாயக்கூடம் பயன்பாடின்றி மூடப்பட்டு கிடக்கிறது.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், வாலாஜாபாத் ஒன்றியம் கீழ் ஒட்டிவாக்கம் ஊராட்சி கிராம மக்கள் பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடத்த, சுமார் 5 கிமீ தூரம் உள்ள வாலாஜாபாத் செல்ல வேண்டும். இதனால், எங்கள் பகுதியிலேயே, சமுதாயக்கூடம் கட்டி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் சார்பில், எங்கள் பகுதியில் ஒரு சமுதாய கூடம் கட்டி கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த கட்டிடத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை. இதனால், இந்த சமுதாய கூடத்தை பயன்படுத்தாத முடியாத நிலை உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இந்த சமுதாய கூடத்தை, ஒன்றிய நிர்வாகம் சிமென்ட் குடோனாக பயன்படுத்தியது. தற்போது, அந்த சிமென்ட் தூசுகள் கூட அங்கிருந்து அகற்றவில்லை. மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த சமுதாய கூடத்தை மேம்படுத்தி, கிராம மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், இந்த ஊராட்சிக்கு மேலும் வருமானத்தை உயர்த்த வாய்ப்புள்ளதாக இருக்கும் என்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சமையலறை, உணவு பரிமாறும் பகுதி, கழிப்பறை ஆகியவற்றை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலகர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Walajabad Union Venkudy Village ,facilities ,
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...