×

மாமல்லபுரத்தில் 100 ஆண்டுகளை கடந்த குறநாட்டு குளத்தை சீரமைக்க வேண்டும்

மாமல்லபுரம், அக். 16: மாமல்லபுரத்தில் 100 ஆண்டுகளை கடந்த குறநாட்டு குளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மாமல்லபுரம் பேரூராட்சியின் 15 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பேரூராட்சியில், திருக்குளத் தெருவும், ஒத்தவாடை குறுக்கு தெருவும் இணையும் இடத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான குறநாட்டு குளம் உள்ளது. இந்த குளத்தை முறையாக பராமரிக்காமல் விட்டதால் செடி, கொடிகள் முளைத்து காடு போல் காட்சியளிக்கிறது. இதனால், பாம்பு, தேள், பூரான் உள்பட பல்வேறு விஷப் பூச்சிகள் குளத்தில் அதிகமாக உள்ளன. இந்த விஷப் பூச்சிகள் அடிக்கடி அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால், அப்பகுதி மக்கள் தூக்கம் கெட்டு பயத்துடனே தினமும் வாழ்கின்றனர். மேலும், இந்தக் குளத்துக்கு அருகில் உள்ள ஓட்டல், ரெஸ்டாராண்ட், லாட்ஜ் ஆகியவைகளில் இருந்து  வெளியேறும் கழிவுநீர், இந்த குளத்தில் விடப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இந்த கழிவுநீர், குளத்தில் விடப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி, பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா உள்பட பல்வேறு மர்ம காய்ச்சல் ஏற்படும் நிலை உள்ளது.அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள், துர்நாற்றத்தை தாங்க முடியாமல், மூக்கை பொத்தியபடி சென்று வருகின்றனர். கழிவுநீரை குளத்தில் விடப்படுவதால் அருகில் ஆழ்துளை கிணறு அமைத்தாலும், அந்த நீரும் சாக்கடை நாற்றம் அடிக்கிறது. இதையொட்டி அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் அந்த குளத்தில் மழைநீர் செல்ல, கால்வாய்கள் கட்டப்பட்டன. மழைநீர் செல்வதற்காக கட்டப்பட்ட கால்வாய்களை ஆக்கிரமித்து, குளத்தில் கழிவுநீரை மட்டுமே செல்லும்படி பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும், கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இந்த குறநாட்டு குளம் சுமார் 100 ஆண்டு பழமை வாய்ந்தது. கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன் இந்த குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தோம். தற்போது, மழைநீர் செல்லும் கால்வாயில் ஓட்டல், ரெஸ்ட்டாரண்ட், லாட்ஜ் வைத்துள்ளவர்கள் கழிவுநீரை விடுகின்றனர்.
எனவே, இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, பழமையான குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தி முறையாக பராமரிக்க வேண்டும் என்றனர்.

Tags : pond ,Mamallapuram ,
× RELATED மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம்...