×

பெரும்பாக்கத்தில் நள்ளிரவு பயங்கரம் 2 வாலிபர்கள் சரமாரி வெட்டி கொலை


சென்னை, அக். 16: சென்னை பெரும்பாக்கத்தில் நள்ளிரவில் ஆட்டோவில் அமர்ந்து மது குடித்த லாரி கிளீனர், ஆட்டோ டிரைவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக, பைக்கில் தப்பிய 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை பெரும்பாக்கம், இந்திரா நகரைச் சேர்ந்தவர்கள் ஆனந்த் (23), லாரி கிளீனர். இவரது உறவினர் ஸ்டீபன் (23), ஆட்டோ டிரைவர். இவர்கள் இருவரும் கடந்த 14ம் தேதி இரவு 11 மணியளவில் அதே பகுதியில் உள்ள ஆனந்தா நகர் டாஸ்மாக் கடை அருகே ஆட்டோவில் உட்கார்ந்து மது அருந்தியுள்ளனர்.  அப்போது, 3 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஆனந்த் மற்றும் ஸ்டீபன் ஆகிய இருவரையும் பட்டாக்கத்திகளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதை பார்த்த பொதுமக்கள் பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது ஆனந்த் மற்றும் ஸ்டீபன் ரத்தவெள்ளத்தில் கிடந்தனர். ஸ்டீபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய ஆனந்தை 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஆனந்த் உயிரிழந்தார்.

போலீசாரின்  முதல்கட்ட விசாரணையில், ஸ்டீபன், ஆனந்த் ஆகியோர் ஆட்டோவில் உட்கார்ந்து மது அருந்திக் கொண்டிருக்கும்போது, மோட்டார் சைக்கிள் ஆட்டோவில் உரசியது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதை பார்த்த ஆனந்த், ஸ்டீபன் ஆகியோர் சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர். இதையடுத்து ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அங்கிருந்து சென்றனர்.
இதையடுத்து மீண்டும் ஆனந்த் மற்றம் ஸ்டீபன் ஆகியோர் ஆட்டோவில் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் 6 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளனர். அவர்கள் வந்து, “இங்கு இருந்த ஆட்டோவை எங்கே” எனக் கேட்டுள்ளனர். அப்போது ஆனந்த், ஸ்டீபன் ஆகியோர் “அவர் போய்விட்டார். அவர் என் தம்பிதான். என்னிடம் சொல்லுங்கள்” எனக் கேட்டுள்ளனர். இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களுக்கும், ஆனந்த் மற்றும் ஸ்டீபன் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி உள்ளது.

மோதல் அதிகரிக்கவே தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்து இருவரின் மார்பு, கழுத்து பகுதிகளில் வெட்டிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலீசார் இந்த தகராறு நடக்கும்போது பார்த்தவர்கள், பார் ஊழியர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் என 11க்கும் மேற்பட்டவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த இரட்டைக் கொலை சம்பவத்தால் பெரும்பாக்கம் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Most ,youths ,
× RELATED சேலம் அருகே பயங்கரம்: அதிமுக பெண் பிரமுகர் நடுரோட்டில் குத்திக்கொலை