லாரி மீது பைக் மோதியதில் மீனவர் பலி

திருக்கழுக்குன்றம், அக்.16: கல்பாக்கம் அடுத்த அங்காளம்மன் குப்பத்தை சேர்ந்தவர் சுதாகர் (38). மீனவர். நேற்று முன்தினம் இரவு சுதாகர், கல்பாக்கத்தில் இருந்து பைக்கில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வீட்டுக்கு புறப்பட்டார். காத்தான்கடை அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரி, திடீரென நின்றது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பைக், லாரியின் பின் பகுதியில் வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுதாகர், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதையறிந்ததும் அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டனர். பின்னர், மறியலில் ஈடுபட்டனர். அப்போது, இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். பலியான சுதாகர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.

தகவலறிந்து கூவத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

* காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த களியனூர் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் கோபி (36). நேற்று காலை கோபி, நசரத்பேட்டைக்கு மரம் வெட்டச் சென்றார். நேற்று மதியம் முதல் காஞ்சிபுரத்தில் விட்டுவிட்டு மழை பெய்தது.

மதியம் சுமார் 2 மணியளவில் மழை நின்றதும் கோபி மரக்கிளைகளை வெட்டுவதற்காக மரத்தில் ஏறினார். அப்போது திடீரென இடி இடித்தது. உடனே அவர், கீழே இறங்க முயன்றார். அந்த நேரத்தில் திடீரென இடி தாக்கியதில், அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவலறிந்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

* செய்யூர்: சூனாம்பேடு அருகே கொளத்தூர், சின்ன கோட்டைக்காடு, தேண்பாக்கம், சூனாம்பேடு ஆகிய பகுதிகளில் வெளிமாநில மதுபானங்கள் கடத்தி வந்து, வீடுகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சூனாம்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் மேற்கண்ட பகுதிகளுக்கு சென்று, அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, தேன்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பத்மா (47), பிரியா (25), சூனாம்பேடு சுபலட்சுமி (37), சின்ன கோட்டைக்காடு பாரதி (29), கொளத்தூர் தனபாக்கியம் (57) ஆகியோர், வெளிமாநில மதுபானங்களை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி விற்பனை செய்தது தெரிந்தது.

இதையடுத்து போலீசார், 5 பெண்களையும் கைது செய்தனர்.

Related Stories:

>