×

வரதராஜ பெருமாள் கோயில் மாடவீதிகளை சுற்றி நிறுத்தப்படும் சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்


காஞ்சிபுரம், அக்.16: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மாடவீதிகளில் சுற்றுலா வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுவதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், தெற்கு மாடவீதியில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் நடந்த வரதராஜ பெருமாள் கோயில் வளாகத்தை சுற்றி தினமும் வெளியூர்களில் இருந்து வரும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனல், இந்த பகுதியில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வெளியூர், வெளி மாவட்டங்கள், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். கார் மற்றும் பஸ் மூலம் வருபவர்கள், தங்களது வாகனங்களை பார்க்கிங் செய்ய இடவசதி இல்லாததால், வடக்கு மாடவீதி மற்றும் தெற்கு மாடவீதியில், கோயில் சுவரை ஒட்டி நிறுத்ததி விட்டு செல்கின்றனர். வடக்கு மாடவீதியில் அறிஞர் அண்ணா நினைவு இல்லம் தொடங்கி டோல்கேட் வரை சாலை வழியாக வாலாஜாபாத், செங்கல்பட்டு, தாம்பரம் மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்கள், கார்கள், பைக்குகள் அனைத்தும் செல்லவேண்டும். கோயில் சுற்றுச்சுவரை ஒட்டி சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதால் எதிர் எதிரே 2 பஸ்கள் வந்தால் செல்ல வழியின்றி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அதேபோல் தெற்கு மாடவீதியில் கார்கள் மற்றும் சுற்றுலா பஸ்களை நிறுத்துகின்றனர். இதனால், அப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்களது கார் மற்றும் பைக்குகளை நிறுத்த இடமில்லாமல், சிரமப்படுகின்றனர். குறிப்பாக புரட்டாசி மாதத்தைத் தொடர்ந்து ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் சபரிமலை செல்லும் பக்தர்கள் அதிகளவில் காஞ்சிபுரம் வந்து செல்வார்கள். அப்போது ஏராளமான வாகனங்கள் வரும்.  இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படும். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு கோயிலுக்கு அருகில் ஏதேனும் இடத்தை தேர்வுசெய்து வரதராஜ பெருமாள் கோயில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : tourist vehicles ,streets ,
× RELATED சென்னையில் நாளை திறந்த வெளி வேனில்...