கும்மிடிப்பூண்டி அருகே வீடுகளை காலிசெய்ய மிரட்டல்

திருவள்ளூர், அக்.16: மரங்களை பிடுங்கி எறிந்து வீடுகளை காலி செய்யசொல்லி ஒரு கும்பல் மிரட்டுவதாக முக்கரம்பாக்கம் மக்கள், கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.  கும்மிடிப்பூண்டி அடுத்த முக்கரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட வேட்டைக்காரன்மேடு பகுதி மக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செயலாளர் நீலவானத்து நிலவன், மாவட்ட பொருளாளர் தண்டலம் தமிழ்செல்வன்,  அஞ்சலி, பத்மா ஆகியோர் தலைமையில் திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது; முக்கரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட வேட்டைக்காரன்மேடு பகுதியில் 50 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். 2013ம் ஆண்டு எங்களுக்கு அரசு பட்டா வழங்கியுள்ளது.  கடந்த 4ம் தேதி கிராமத்தை சேர்ந்த சிலர், அடியாட்களுடன் வந்து பொக்லைன் இயந்திரம் மூலம் வீடுகளை சுற்றியிருந்த மரங்களை பிடுங்கி எறிந்தனர்.  இதுகுறித்து கேட்டதற்கு, அனைவரும் வீடுகளை காலி செய்து சென்றுவிடுங்கள் என மிரட்டினர். இதனால் அச்சத்துடன் வசிக்கிறோம். எங்களை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.  இம்மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories:

>