×

கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு கிடைக்குமா?

திருவள்ளூர், அக் 16: திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் பெருகி வருவதால், தீபாவளிப் பண்டிகைக்கு ஊருக்குச் செல்பவர்களின் வீடு மற்றும் உடைமைகளுக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி கருதப்படுகிறது. இந்நாளில், எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மகிழ்வர். பாரம்பரிய பண்டிகையின்போது, பெரியவர்களிடம் ஆசி பெறுவது என்பது தமிழர்களின் மரபு. சென்னை புறநகர் பகுதியான திருவள்ளூர் மாவட்டத்தில், பிற மாவட்டங்களைச் சேர்ந்த பலர் குடியிருக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில், செவ்வாப்பேட்டை, வெள்ளவேடு, மப்பேடு, கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளில், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பெருகி உள்ளதால், இப்பகுதிகளில் வெளியூர் மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.

இவர்களில், தீபாவளிப் பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் செல்ல முடிவு செய்துள்ளவர்கள், வீட்டைப் பூட்டி விட்டுச் செல்ல நேர்வதால் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ளனர். இம்மாவட்டத்தில், செவ்வாப்பேட்டை, வெள்ளவேடு, மப்பேடு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில், பூட்டிய வீடுகளில் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. போலீசார், ரோந்துப் பணிகள் மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தும், குற்றச் சம்பவங்கள் நிகழ்வது, மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. இதனால், வீடுகளைப் பூட்டி விட்டு, வெளியூர் செல்ல பலர் தயக்கம் காட்டுகின்றனர். மேற்கண்ட நான்கு போலீஸ் நிலைய எல்லையில் மட்டும் கடந்த 5 மாதங்களில் நகைகள் கொள்ளை போன சம்பவம் அரங்கேறி உள்ளது. எனவே, பாதுகாப்பு குறித்து மாவட்ட எஸ்.பி., உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

என்ன சொல்கின்றனர் போலீசார்?
திருவள்ளூர் சப்-டிவிஷனில், தீபாவளி விடுமுறைக்கு செல்பவர்கள், தங்களது வீட்டின் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும் என எஸ்பி அரவிந்தன் கூறுகையில், ‘’பொதுமக்கள் ஒரு நாளைக்கு மேல் வெளியூர் செல்வது என்றால், அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்.செல்போன் எண்ணையும் வழங்க வேண்டும். வீட்டில், இரவில் ஒரு லைட் எரியும் வகையில் வைத்திருக்க வேண்டும். நகைகள், பணத்தை வங்கி லாக்கரில் வைத்து செல்ல வேண்டும். அருகில் உள்ள வீட்டில் தகவல் தெரிவித்து, காலை, மாலை நேரங்களில் பார்வையிட சொல்ல வேண்டும்.வெளியூர் சென்ற பின்பும் அருகில் உள்ளவர்கள் வீட்டிற்கு தொடர்பு கொண்டு விசாரிக்க வேண்டும். அதே பகுதியில் உறவினர்கள் இருந்தால், அவர்களை அவ்வப்போது வீட்டின் பக்கம் சென்று பார்த்து கொள்ள சொல்ல வேண்டும். அதேபோல், ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும், ‘பூட்டிய வீடுகள் பதிவேடு’ பராமரிக்க வேண்டும். வெளியூர் சென்றவர்கள், தகவல் தெரிவிக்கும்பட்சத்தில் அந்த வீட்டிற்கு இரவில் இரண்டு முறை போலீசார் சென்று பார்வையிட வேண்டும். இதற்காக போலீசாரை நியமிக்க வேண்டும். பகலிலும் பூட்டிய வீடு பகுதிகளில் சுற்றிவந்து, அருகில் உள்ளவர்களிடம் சந்தேக நபர்கள் சுற்றுவது தெரியவந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்’’ என்றார்.

Tags : Homes ,Diwali ,residents ,
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...