×

சுத்தமான குடிநீர் வழங்காததை கண்டித்து அரசு பஸ் சிறைபிடிப்பு

கும்மிடிப்பூண்டி, அக். 16: கும்மிடிப்பூண்டி அடுத்த ஓமசமுத்திரம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் கடலையொட்டி அமைந்துள்ளதால், இங்கு நிலத்தடிநீர் உப்பு தண்ணீராக உள்ளது. இதனால் இப்பகுதி மக்களுக்கு 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நத்தம் ஊராட்சியில் இருந்து பைப் லைன் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக ஓமசமுத்திரத்தில் உள்ள 5 தெருக்களுக்கு சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் உப்பு தண்ணீரை காய்ச்சி குடிக்கின்றனர்.  இதன்காரணமாக குழந்தைகள், முதியவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.   
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் செய்தும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், ஊராட்சி செயலாளரை நியமித்து, அவர் மூலம் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளவும், சுத்தமான குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தும் பலனில்லை.

 இதனால் விரக்தி அடைந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை 8 மணியளவில் ஓமசமுத்திரம் சாலையில் திரண்டனர். சாலையின் குறுக்கே காலி குடங்களை வைத்து, அந்த வழியாக கல்லூரில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த  அரசு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பாட்டிலில் பிடித்து வைத்திருந்த உப்பு தண்ணீரை காண்பித்து கோஷங்களை எழுப்பினர்.
மேலும், சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால் போக்குவரத்து தடைபட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து ெசன்றனர். இந்த சம்பவத்தால் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : Govt. Bus ,
× RELATED அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் ரூ. 66 லட்சம் நகை பணம் கொள்ளை