×

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிவியல் கண்காட்சியில் 97 கண்கவர் படைப்புகள்

புதுக்கோட்டை, அக்.16: பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் சார்பில் பள்ளி அளவில் நடத்தப்பட்ட கண்காட்சியில் தேர்வு செய்யப்பட்ட படைப்புகளை கொண்டு, கல்வி மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி புதுக்கோட்டையில் உள்ள திருஇருதய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த அறிவியல் கண்காட்சியில் கணிதம், நகரும் பொருட்கள், உணவு, புதிய கண்டுபிடிப்பு முயற்சிகள் உள்ளிட்ட எட்டு தலைப்புகளில் மாணவர்களின் அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. இதில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர் ஆகிய கல்வி மாவட்டங்களை சேர்ந்த 28 பள்ளிகளின் 84 படைப்புகளும், 13 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த 13 படைப்புகளும் என மொத்தம் 97 அறிவியல் படைப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. இதில் 8 தலைப்புகளில் ஒவ்வொரு தலைப்புகளில் இருந்தும் முதல் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு காசோலை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

இந்த அறிவியல் கண்காட்சியை கலெக்டர் உமா மகேஸ்வரி தொடங்கி வைத்து பார்வையிட்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்த தினத்தில பள்ளி மாணவர்களுக்கான அறிவியியல் கண்காட்சி நடைபெறுவது பெருமைக்குறிய ஒன்றாகும்.
குறிப்பாக பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஊக்குவித்து திறன்களை வெளிக்கொண்டுவரவும், தலைமை பண்பு, குழு மனப்பான்மை, அறிவியல் சார்ந்த ஆரோக்கியமான கலந்துரையாடல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாணவ பருவத்திலேயே புதிய தொழில்நுட்பத்தினை ஆராய்ந்து கையாள தெரிந்து கொள்ளவும் அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நவீன இந்தியாவின் உருவாக்கத்தில் மாணவர்களின் பங்கை ஊக்குவிக்கவும், இதுபோன்ற அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இதுபோன்ற அறிவியல் கண்காட்சிகளில் கலந்து கொண்டு தங்களது புதிய அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தி அறிவுத்திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து அறிவியல் கண்காட்சியை மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். இதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலெட்சுமி, மாவட்ட கல்வி அதிகாரிகள் ராகவன், திராவிடசெல்வம், ராஜேந்திரன் உள்பட பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : science exhibition ,Pudukkottai district ,
× RELATED பொதுப்பணித்துறை கண்டு கொள்ளவில்லை:...