×

அறந்தாங்கி அருகே சரக்கு ஆட்டோ-வேன் நேருக்கு நேர் மோதல்

அறந்தாங்கி, அக்.16: அறந்தாங்கி அருகே சந்தனக்கூடு விழாவிற்கு சென்று வந்த சரக்கு ஆட்டோ மீது, கர்நாடகாவில் இருந்து நண்டு ஏற்றிவந்த வேன் மோதியதில், 5 பேர் படுகாயம் அடைந்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து பிரான்மலை(57), முகமதுஅப்துல்லா(26), அபுதாஹிர்(21), சல்மா(40), சபினாபேகம்(25) உள்ளிட்ட 13 பேர் நேற்று முன்தினம் கோட்டைப்பட்டினத்தில் நடைபெற்ற சந்தனக்கூடு விழாவிற்கு ஒரு சரக்கு ஆட்டோவில் சென்றுள்ளனர். சந்தனக்கூடு முடிந்து அவர்கள் நேற்று காலை அதே சரக்கு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் வந்த வாகனம் கள்ளனேந்தல் அரசு கலைக்கல்லூரி அருகே சென்றது. அப்போது எதிரே கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து மீமிசலுக்கு நண்டு ஏற்றி வந்த வேனும், ஆட்டோவும் கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதியது.

இதில் பிரான்மலை, முகமதுஅப்துல்லா, அபுதாஹிர், சல்மா, சபினா பேகம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் 8 பேர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். சரக்கு ஆட்டோவுடன் மோதிய சரக்கு வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்தில் காயமடைந்தவர்களை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Cargo auto-van ,Aranthangi ,collision ,
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு